கிமு 300 ஆம் ஆண்டுகால தாழி, இரும்பு பொருட்கள் புதுவையில் கண்டுபிடிப்பு!
புதுச்சேரி: ஆரோவில் அருகே இரும்புக் காலப் பொருட்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் இரும்பு காலத்தைச் சேர்ந்த அதாவது கி.மு 300ஐச் சேர்ந்த , இறந்தவர்களின் உடல் எச்சங்களைப் புதைக்கும் தாழிகள், கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நடந்த இந்த அகழ்வாய்வில், ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. இதில் 4 தாழிகள் கிடைத்துள்ளன. இந்த தாழிகளுக்குள் சிறு சிறு கிண்ணங்கள் போன்ற வேறு பொருட்களும் இருந்தன.
இவை தவிர, 4 வாட்கள், ஈட்டி, கோடாலி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. அந்த இரும்புக் கோடாலி மரக் கைப்பிடியில் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. மரம் மக்கிவிட, இரும்புக் கோடாலியும் கம்பியும் கிடைத்துள்ளன.
தவிர, பித்தளையால் ஆன 3 மணிகளும் கிடைத்துள்ளன. கண்ணாடி, கற்களால் ஆன கழுத்தில் அணியக்கூடிய மணிகளும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
இங்கிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் எதிலும் எழுத்துக்கள் இல்லை. "தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.பி 200 -ல் உருவாயின. ஆனால், இங்கு கிடைத்திருக்கும் பொருட்கள் கி.மு. 300 ஐ சேர்ந்தவை. ஆகவே பிராமி எழுத்துக்கள் ஏதும் இல்லை.
இருந்தபோதும், குறியீடுகள் இருக்கின்றன. இந்தக் குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆய்வுசெய்ய வேண்டும்" என்கிறார் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய தாகூர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் பெ.ரவிச்சந்திரன்.












Click it and Unblock the Notifications