ஜாதி தீண்டாமையற்ற கிராமத்துக்கு நிதி! பட்டியலின வழக்குகளுக்கு 4 புதிய நீதிமன்றங்கள் -ஸ்டாலின் அதிரடி
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நான்கு புதிய தளியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லார்க்கும் எல்லாம் - என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நோக்கம், லட்சியம், பாதை! இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டங்கள் தீட்டி வருகிறோம்.

ஸ்டாலின் பேச்சு: இதில் சிலவற்றை மட்டும் இங்கு அனைவருக்கும் நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏப்ரல் 14-ஆம் தேதி 'சமத்துவ நாளாக' கொண்டாடப்பட்டு வருகிறது. வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை (Solatium) குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும், அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த நிதியாண்டில், 3,870 நபர்களுக்கு 47 கோடி ரூபாய் தீருதவித் தொகை (Solatium) வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூக கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு, இப்பயிற்சிகள் அண்ணா பணியாளர் நிர்வாகக் கல்லூரியின் மூலம் வழங்கப்பட உள்ளன.
புதிய நீதிமன்றங்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 22 நீதிமன்றங்கள் உள்ளன. சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நான்கு புதிய தளியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சேலத்தில் ஒரு புதிய தனியுறு சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது.
சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரி சிற்றூர்களில் (Model Village), வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளன. தீண்டாமை கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு, 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.
மனிதநேய வார விழா: பொதுமக்களிடையே தீண்டாமைக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை "மனிதநேய வார விழா" நடத்தப்படுகிறது. ஆதிதிராவிட மக்கள் கல்விசார்ந்த திட்டங்களுக்காக 2,206 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டிற்காக 120 கோடி ரூபாய் சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ஆதிதிராவிட நலத் துறையால் நடத்தப்படும் 366 விடுதிகளை பழுது பார்க்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றபின் திருத்தி அமைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தாட்கோ: வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, திருத்தி அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் 18 மாணவர்களுக்கு 3 கோடியே 66 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், தாட்கோவால் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம், 20,544 நபர்கள் மற்றும் 296 உதவிக் குழுக்கள் சுய பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டில் 68,225 நபர்கள் பயனடையும் வகையில் 285 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 கிராமங்களில் வாழும் இருளர் மக்களுக்கு 967 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சேகரம் செய்வதற்கு சிறப்பினமாக 86 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு 500 குடும்பங்களைச் சேர்ந்த, கூலித் தொழிலாளிகளாக இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது தொழில் முனைவோராக தரம் உயர்த்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications