மதுரை: 55 வயது பெண் தலை துண்டித்து படுகொலை!
மதுரை: மதுரை அருகே வயதான பெண் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிச்சாபட்டியை சேர்ந்த அழகப்பன் என்பவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 55). இவர்களுக்கு மூன்று மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அழகப்பன் இறந்து விட்டார். பிள்ளைகள் அனைவரும் வெளியூர்களில் உள்ளதால், பாண்டியம்மாள் அரிச்சாபட்டி மலையடி வாரத்தில் தனியாக வசித்தபடி, அருகில் உள்ள ரப்பர் தொழிற் சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தினமும் டீ-காபி வழங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல நேற்றிரவு ரப்பர் தொழிற்சாலையில் டீ விற்று விட்டு திரும்பியிருக்கிறார் பாண்டியம்மாள். அப்போது வழியில் மறைந்திருந்த மர்மக் கும்பல் ஒன்று பாண்டியம்மாளை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் தலை துண்டாகி தரையில் விழுந்த பாண்டியம்மாள், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாண்டியம்மாள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து அவர்கள் மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாண்டியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாண்டியம்மாளை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து இதுவரை துப்பு துலங்கவில்லை. சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பாண்டியம்மாள் கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications