
தென்காசியில் ஷாக்.. தலித் சமூகத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. தீவிர விசாரணை
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகியுள்ளதாகவும், இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தென்காசி அருகே இனோவா கார் மோதி விபத்து.. போலீஸ் கான்ஸ்டபிள் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

பள்ளி மாணவன்
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் 7ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சிறுவனின் உடல் வீட்டில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "சேர்ந்தமரம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் கேரளாவில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார். தாய் கூலி வேலை செய்து வருகிறார்.

தற்கொலை
இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 7ம் வகுப்பும் அருகில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பயின்று வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இன்று காலையில் பள்ளி செல்வதாக கூறி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். ஆனால் வீடு திறந்திருக்கவே உள்ளே சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர் 7ம் வகுப்பு பயிலும் மாணவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விசாரணை
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தற்போது உடல் மீட்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளனர். மீட்கப்பட்ட உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் விசாரணை மேற்கொண்டார். அதேபோல பள்ளியிலும் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் டிஎஸ்பி தெய்வம், கூடுதல் டிஎஸ்பி சார்லஸ் கலைமணி, ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் வேல்மணி ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உரையாடல்
பள்ளியின் கண்காணிப்பு கேமிராக்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழந்திருப்பது பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் என்பதால் பல்வேறு கோணங்களில் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளிடம் தொடர்ந்து உரையாடுவதுதன் மூலம் இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்
தற்கொலை என்பது அனைத்திற்கும் தீர்வாகாது. வாழ்வதற்கான போராட்டம்தான் எல்லாவற்றிற்கும் தீர்வை கொடுக்கும். தற்கொலை குறித்த எண்ணம் ஏற்படும் போது 104 எனும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். தற்கொலைகளை தடுப்போம் வளமான சமூகத்தை உருவாக்குவோம்.