அண்ணாமலை பாதயாத்திரையில் நுழைந்த 'காட்டெருமை' - துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிய பாஜக நிர்வாகிகள்
கொடைக்கானல்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது காட்டெருமை உள்ளே நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் அங்கும் இங்குமாக சிதறி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியாக பாதயாத்திரை சென்று வருகிறார். தற்போது 2-வது கட்ட யாத்திரையை திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொண்டிருக்கிறார்.

பழனி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று அண்ணாமலையின் யாத்திரை நடைபெற்றது. கொடைக்கானல் நாயுடுபுரத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. கொடைக்கானல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை பிரசாரம் செய்து வந்தார்.
அண்ணாமலையின் யாத்திரை கொடைக்கானல் நகர சாலைகளில் சென்ற போது திடீரென காட்டெருமை உள்ளே நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் அப்பகுதியில் இருந்து தலை தெறிக்க சிதறி அடித்து ஓடினர். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.
கொடைக்கானல் யாத்திரையை நிறைவு செய்த பின்னர் நிலக்கோட்டை, ஆத்தூர் தொகுதிகளில் அண்ணாமலை பயணிக்கிறார். அதன் பின்னர் நத்தம், திண்டுக்கல் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறது.
செப்டம்பர் 15-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் நுழைகிறார் அண்ணாமலை. அங்கு வேடசந்தூர் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். பின்னர் பழனிக்கு செல்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 5 நாட்கள் அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications