ஆவின் பால்.. "அமுல்" வந்தாலும் ஆவின் சமாளிக்கும்..அட காப்பீடு திட்டம்.. தமிழ்நாடு அரசின் புது அதிரடி
சென்னை: ஆவின் பால் ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளதாகவும், ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளதாகவும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.. அத்துடன், அனைத்து மாடுகளையும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமுல் நிறுவனம் தமிழகத்துக்குள் நுழைய முயற்சித்து வருகிறது.. அமுல் என்பது, குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.. அதாவது, பால் உற்பத்தி விவசாயிகளிடம் இருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்ய, அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில், தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விளம்பர பணிகளையும் ஆரம்பித்துள்ளது.
தட்டுப்பாடு:
தமிழகத்துக்குள் திடீரென, அமுல் வந்துவிட்டால், ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்படும்... ஏற்கனவே ஆவின் பால் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வரும்நிலையில், அமுலின் வருகையானது, கிலியை தந்து வருகிறது..
மேலும், ஆவினில், அமுல் நிறுவனத்தின் தலையீடும் அதிகரிக்கலாம் என்றும் கலக்கம் சூழ்ந்து வருகிறது.. எனவேதான் இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.. இது தொடர்பாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றன.. அமுல் நிர்ணயம் செய்துள்ள விலையை காட்டிலும் ஆவின் நிறுவனம் கூடுதல் விலைக்கு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்று என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அமித்ஷாவுக்கு கடிதம்:
அதற்கேற்றவாறு, தமிழக முதல்வர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, அவர் சொன்னதாவது: "தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை.. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.. பால் உற்பத்தி பகுதியில் மாநிலங்கள் இடையே விதிமீறல் ஏற்பட கூடாது..
தமிழகம்:
இப்போதைக்கு, அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் வருவது, பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல்போல தெரிகிறது.. அதனால்தான், தான் 2 விஷயங்களை சொல்லி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.. அமுல் நிறுவனமும் கொள்முதல் விலையை உயர்த்தி தருவதாக சொல்கிறார்கள்.. ஆனால் ஆவினில் பல்வேறு சாதகமான விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றன..
ஆவின் சார்பில் மாடுகளுக்கு காப்பீடு உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது.. தமிழகத்தில் இதுவரை 1 லட்சம் மாடுகளுக்கு தான் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.. ஆனால் இனிமேல், அனைத்து மாடுகளையும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பால் உற்பத்தி:
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணம் வழங்கப்படுகிறது.. செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அவை மறுபடியும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. ஆவின் பால் ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது.. ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன"என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஒரு பிரச்சனையுமில்லை :
அமுல் நிறுவனத்தால், ஆவினுக்கு பிரச்சனை இல்லை என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தாலும், அமுலின் வருகையானது, பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இனம்புரியாத கலக்கத்தை ஏற்படுத்தியபடியே உள்ளது.. கொள்முதலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்குமோ என்ற கவலையும் சூழ்ந்துள்ளது.. பால் சந்தையில் போட்டி ஏற்படுவது நல்லதுதான் என்றும், அப்போதுதான் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் ஒருசாரார் வரவேற்று வருவது குறிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications