அதிமுகவின் சாதனைகளைப் பட்டியலிட்ட குண்டுகல்யாணம் ஜீப் மீது கல்வீச்சு
தஞ்சாவூர்: தஞ்சை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரித்த நடிகர் குண்டுகல்யாணம் வாகனம் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதிமுக சார்பில் தஞ்சாவூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக கு.பரசுராமன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் நடிகர் குண்டுகல்யாணம் திறந்த ஜீப்பில் நின்றுகொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது குண்டு கல்யாணத்துடன் ஜீப்பில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர்.காமராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சிவதிருஞானசம்பந்தம். பூதலூர் ஒன்றிய விவசாய அணி செயலாளர் இளவரசன் ஆகியோரும் நின்றிருந்தனர்.

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி குண்டுகல்யாணம் பேசிக்கொண்டிருந்த போது திடீர் என்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து அவரது வாகனத்தின் மீது விழுந்தது. இத்திடீர் தாக்குதலால் அங்கு நின்றிருந்த அதிமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். கல் வந்த திசையை நோக்கி அவர்கள் விரைந்தனர். அதற்குள் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பூதலூர் போலீசார் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார்கள்.
இதற்கிடையே இத்தாக்குதல் சம்பவத்தால் தடைபட்ட தனது பிரச்சாரத்தை மீண்டும் தொடர்ந்த குண்டுகல்யாணம், மைக்கில் ‘கல்வீசியவர்களை போலீசார் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் வாருங்கள்' என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து பூதலூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் காமராஜ் பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கலிபுல்லா பார்வையிட்டார்.
குண்டுகல்யாணம் வாகனத்தின் மீது கல் வீசிய மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இத்தாக்குதல் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.












Click it and Unblock the Notifications