தாரை தாரையாக கண்ணீர்.. சிவராத்திரி பிரம்ம முகூர்த்தத்தில் மனமுருகி சிவனை வழிபட்ட நடிகர் சந்தானம்!
கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகாசிவராத்திரி விழாவில், பிரம்மமுகூர்த்த வேளையில் மனமுருகி, கண் கலங்க பிரார்த்தனை செய்துள்ளார் நடிகர் சந்தானம்.
மகா சிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வணங்கி பிரார்த்தனை செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே விழித்திருந்து சிவனை வழிபாடுவார்கள். பலர் சிவாலயங்களுக்குச் சென்று இரவு முழுவதும் மற்ற பக்தர்களோடு சேர்ந்து வழிபாடுர்கள். கோவை அருகே வெள்ளையங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகளுடன் மகாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் நடைபெறும்.

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வார்கள். அந்தவகையில் இந்த ஆண்டும் ஏராளமானோர் ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் மகாசிவராத்திரி நிகழ்வில் பங்கேற்று, கண்கவர் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளோடு சிவனை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
மகா சிவராத்திரி விழாவில் பிரபலங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
ஏராளமான சினிமா பிரபலங்கள் ஆண்டுதோறும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பது வழக்கம். அந்தவகையில் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் இன்று பங்கேற்றுள்ளனர். திரையிசை பாடகர் சங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. தன் கம்பீர குரலால் பாடி அரங்கை அதிரச் செய்தார் தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம்.
கண்களில் கண்ணீர் வழிய சந்தானம் மனம் உருகி வேண்டுதல்: மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான பிரம்மமுஹூர்த்த வேளையில் லட்சக்கணக்கான மக்கள் சத்குருவுடன் சேர்ந்து ஓம் நமச்சிவாய மந்திர உச்சாடனம் மேற்கொண்டனர். அப்போது பலர் மனமுருகி, கண்ணில் நீர் கசிய பிரார்த்தனை செய்தனர். நடிகர் சந்தானமும், 'நமசிவாய' மந்திரம் சொல்லி கண்ணீர் வழிய சிவனை பிரார்த்தனை செய்தார். சந்தானம் கண்ணீருடன் மனமுருகி சிவனை வழிபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தீவிர சிவபக்தர் சந்தானம்: நடிகர் சந்தானம் தீவிரமான சிவபக்தர். மேலும், சத்குரு ஜக்கி வாசுதேவை தீவிரமாக பின்பற்றி வருபவர். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள், தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது என சத்குரு கடந்த 2021ஆம் ஆண்டு பதிவிட்ட ட்வீட்டை பகிர்ந்து "சத்குருவின் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். கோவில்களை பக்தர்களிடம் விட்டு விடுங்கள் . ஒரு பூஜை கூட நடக்காமல் பல வழிபாட்டுத் தளங்கள் இருப்பதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது." எனத் தெரிவித்திருந்தார்.
சத்குருவுடன் சந்தானம்: கோவில் அடிமை நிறுத்து (Free TN Temples) என்கிற கருத்தை முன்வைத்து, நடிகர் சந்தானம் சத்குருவை பேட்டியும் எடுத்தார். கடந்த ஆண்டு 'ஈஷா கிராமோத்சவம்' திருவிழா விளையாட்டுப் போட்டிகள் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக நடிகர் சந்தானம் பங்கேற்றிருந்தார். அப்போது, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார் சந்தானம்.
சந்தானம் பேசும்போது, "நான் பள்ளியில் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தேன். ஆனால், பேச்சுப் போட்டி, நாடகப் போட்டியில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. இதை கண்டறிந்த ஒரு ஆசிரியர் எனக்கு ஊக்கம் அளித்தார். அதனால் தான் சினிமா துறைக்கு வந்தேன். அதேபோல், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிப்பதற்கு ஈஷா கிராமோத்சவம் ஒரு சிறந்த வாய்ப்பு. நீங்கள் மனது வைத்தால் உங்களால் சச்சின், தோனியை போன்று வெற்றி பெற முடியும்.
சத்குரு என் குரு: எல்லோருக்கும் ஏதாவது திறமை இருக்கும். படிப்பு வரவில்லை என்றால், விளையாட்டு, டான்ஸ் போன்ற திறமைகள் இருக்கும். இளைஞர்கள் போதை பழக்கங்களை தவிர்த்துவிட வேண்டும். சத்குரு போல குரு கிடைத்தது தனக்கு கிடைத்த புண்ணியம். சிவனாகவே சத்குரு வாழ்ந்து வருகிறார்" என சந்தானம் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications