ஏற்காடு இடைத்தேர்தல்: அனல்பறக்கும் பிரச்சாரம்: வாக்காளர்களை வளைத்து பிடிக்கும் ராமராஜன், ஆனந்தராஜ்
சேலம்: ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். திமுக வேட்பாளர் மாறனுக்கு ஆதரவாக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் 4 நாட்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 5 தினங்களே உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர் சரோஜா, தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் உள்பட 65 பேர் தலைமையிலான குழுவினர் ஆங்காங்கே வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

9 இடங்களில் ஜெ.
அதிமுக பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று பி.சரோஜாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். மின்னாம்பள்ளி, வெள்ளாளகுண்டம் பிரிவு, வாழப்பாடி பேருந்து நிலையம், பேளூர் கருமந்துறை பிரிவு ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, வலசையூர், அயோத்தியாப்பட்டினம், உடையாப்பட்டி உள்ளிட்ட 9 இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

நடிகர் ராமராஜன்
சின்னவீராணம் பகுதியில் நடிகர் ராமராஜன் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அவருடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

நடிகர் ஆனந்தராஜ்
சுக்கம்பட்டியில் நடிகர் ஆனந்தராஜ் பேசியபோது, பெருமாள் எம்.எல்.ஏ. இறந்ததும் தாயாக நான் இருக்கிறேன் என்று கூறி அவரது மனைவி சரோஜாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். எனவே சரோஜாவை 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார்.

அமைச்சர்கள் முற்றுகை
உடையாப்பட்டி அருகே உள்ள வரகம்பாடி பகுதியில் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மேயர் விசாலாட்சி, அவினாசி கருப்பசாமி எம்.எல்.ஏ., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மணி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் அன்பகம் திருப்பதி, ஊராட்சி கழக செயலாளர் சொக்கலிங்கம், பஞ்சாயத்து தலைவர் ரவி, அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் பயணம்
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சேலம் சென்றடைந்தார். வெள்ளிக்கிழமை முதல் 4 நாட்கள் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
வெள்ளிக்கிழமை மாலை கக்கன் காலணியில் பிரச்சாரத்தை தொடங்கும் அவர், திங்கள் அன்று கோலத்துக்கோம்பையில் தொடங்கி வாழப்பாடி பேரூரில் தனது பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் முடிக்கிறார்.

டிச.2ல் பிரச்சாரம் முடிகிறது
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் டிசம்பர் 2ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டவர்களைத் தவிர வெளியூரைச் சேர்ந்த அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications