'நிறைய பேர் என்னை திட்டி இருப்பீங்க.. இன்று உங்கள் முன்னே'.. நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேச்சு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை மும்தாஜ், என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன்.. உங்களுக்கு என்னை நன்றாக தெரியும். நீங்கள் நிறைய பேர் என்னை திட்டி இருப்பீர்கள். நிறைய பேர் என்னென்னவோ எனக்காக செய்திருப்பீர்கள்.. ஆனால் இன்று பாருங்கள்..உங்கள் முன்னாடி வந்து இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கண்ணீர் மல்க (மகிழ்ச்சியுடன்) தெரிவித்தார்
சீர்காழி அருகே புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் பேசிய நடிகை மும்தாஜ், "உங்களை எல்லாரையும் பார்த்த பிறகு.. நான் எங்கே இருக்கிறேன்.. எங்கு வந்திருக்கிறேன் என்பது தெரிகிறது.. என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன்.. உங்களுக்கு என்னை நன்றாக தெரியும். நீங்கள் நிறைய பேர் என்னை திட்டி இருப்பீர்கள். நிறைய பேர் என்னென்னவோ எனக்காக செய்திருப்பீர்கள்..

ஆனால் இன்று பாருங்கள்..உங்கள் முன்னாடி வந்து இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன் ( கண்ணீர் விட்டு அழுகிறார்) .. அது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது.. இதற்கு முன்னாடி நான் வெளியில் போய்க்கொண்டிருந்த போது, என்னை சில பெண்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.. என்னை இப்படி பார்க்கிறார்கள் என்றால் இறைவன் முன்னாடி எப்படி போய் நிற்பேன் என்று கலங்கினேன்.. இன்று நீங்கள் காட்டிய அன்பை பார்க்கும் போது வார்த்தைகளே இல்லை..
என் வாழ்க்கையில் என்ன தப்பு செய்தேன் என்றால்.. அது விதி இருந்தது.. அந்த பாவம் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லி விதி இருந்தது என்றார். எல்லாரும் பர்தா அணிவார்கள்.. நான் சிறுவயதில் இருந்தபோது அழகாக இருந்ததாக கூறினார்கள்.. இதனால் நடிக்க சென்றேன். நடிக்க சென்ற போது ஜீன்ஸ் சர்ட் என சிறிய ஆடைகள் அணிந்தேன். அப்போது என்னை எல்லாரும் கீழே பார்ப்பார்கள்.. அப்போது இதுபோல் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தால் நிச்சயம் மாறி இருப்பேன். இப்போது இறைவன் அருளால் இஸ்லாமிய பெண்ணாக நின்று கொண்டிருக்கிறேன்.. " என்று கூறினார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட மும்தாஜ் உருக்கமான வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், "இறைவன் அருளால் இரண்டாவது முறையாக மெக்கா வந்துள்ளேன் என்னைப் பற்றி இந்த உலகம் என்ன பேசினாலும், தற்போது புதிதாக பிறந்த குழந்தையாக நான் உணர்கிறேன்.
நீங்கள் மெக்கா, மெதினாவை பாருங்கள். இந்த உலகை நினைத்து கவலைக்கொள்ளாமல் அல்லாவை நினைத்து வழிபடுங்கள். எனது பாவம் செய்த கண்கள் இப்போது மெக்காவை பார்த்து விட்டன. ஆடிய கால்கள் காபாவில் நடந்துவிட்டன. என்னால் இதை செய்ய முடியும்போது உங்களாலும் இதனை செய்ய முடியும். நல்ல வாழ்க்கையை வாழ இறைவனை வேண்டுங்கள். அல்லா உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பார். யாருக்காகவும், எந்த நிலையிலும் மன உறுதியை விட்டுவிடாதீர்கள்" என்று கூறியிருந்தார்.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மும்தாஜ், மத ரீதியான நிகழ்வுகளில் அதிக ஆர்வத்துடன் பயணித்து வருகிறார். அந்த வகையில் தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications