அடேங்கப்பா.. ஆம்னி பஸ் டிக்கெட்டுக்கு ஃப்ளைட்லயே போகலாம் போலயே.. திமுக அரசை விளாசித் தள்ளும் அதிமுக!
சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம் நேற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட நிலையில், பஸ் கட்டணத்துக்கு ஃப்ளைட் டிக்கெட்டே பரவாயில்லை, இதுதான் திமுகவின் விடியா ஆட்சி என அதிமுக விமர்சித்துள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளில் மிக அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 120 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து ஆம்னி பேருந்துகள் இனி இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்தது. பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினரின் அதிகாரப்பூர்வ கட்டண விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் 1,610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் 2430 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் 1,930 ரூபாய் - அதிகட்பட்ச கட்டணம் 3,070 ரூபாய் என்றும், சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்ச கட்டணம் 2,050 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 3,310 ரூபாய, சென்னையில் இருந்து சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 1650 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 2500 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து நெல்லைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2,380. அதிகபட்ச கட்டணம் ரூ. 3,920. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு குறைந்தபட்ச கட்டணம் 2320 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 3810 ரூபாய். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2,610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் ரூ. 4,340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசே இந்த தொகையை வசூலிக்க ஒப்புதல் தந்துள்ள நிலையில் இதற்கும் குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும், தீபாவளி நாளிலும் இதன் அடிப்படையில்தான் ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டண அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு, ரூபாய் 3 ஆயிரத்தில் விமானத்திலேயே 1 மணி நேரத்திற்குள் சென்றுவிட முடியும் என்ற நிலையில், சொகுசு ஆம்னி பேருந்தில் அதிகபட்சமாக ரூ.3,070 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்த விவகாரத்தில் திமுக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளது. அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "விடியா திமுக ஆட்சியின் மற்றொரு விடியல், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நிர்வாக திறமையற்ற ஆட்சியின் விளைவு... BUS vs FLIGHT கட்டணம். இது தான் விடியா மாடல் ஆட்சி" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications