’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய வீரமங்கை மறைவு.. தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி
மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு மக்கள் வெள்ளத்தில் சென்னை மெரினா கடற்கரை அருகே எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக 'மக்களால் நான்.. மக்களுக்காக நான்...' என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். வீதிகளிலும் சாலையோரத்திலும் ஜெயலலிதா போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருச்சியில் மத்திய பேருந்து நிலையம்,உய்யக்கொண்டான் திருமலை,சத்திரம் பேருந்து நிலையம், மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவகங்கையில் மறைந்த முதல்வரின் உருவப்படத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொன்ட மவுன ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
சேலம் ஓமலூர் வட்டாரத்தில் 250 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், மவுன ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். திருச்செங்கோட்டை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்தும், கண்ணீர் சிந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை மற்றும் கோடியக்காட்டில் ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மௌன ஊர்வலம் நடைபெற்றது. சிறு குழந்தை, பெரியவர்கள், கட்சிப் பாகுபாடின்றி அஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் "அம்மா.. அம்மா" என கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications