சென்னையில் வேட்பாளருக்கு எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி அதிமுகவினர் தற்கொலை மிரட்டல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்காக ஜெயலலிதா அறிவித்துள்ள மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் சிலருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 158வது வார்டில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றக்கோரி சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுகவினர் சிலர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலரை மாற்றக் கோரி அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீட் கிடைக்காதவர்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு இன்று காலையிலேயே குவிந்தனர். தென்சென்னை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிரணியினர் மற்றும் நிர்வாகிகள் ராயபேட்டைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னையிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். இதனால் ராயபேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகம் பரபரப்பானது. கட்சிக்காக உழைத்த எங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற குரல் அதிகமாக ஒலித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 115 வார்டுகளில் பழைய கவுன்சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 41 கவுன்சிலருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 127, 128,129, 131, 137, 138, 158வது வார்டுகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. 158வது வார்டுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கவிதாவிற்கு எதிராக இன்றும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி நந்தம்பாக்கம் 158 வட்டத்தில் கவிதா ராஜ்சேகர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் 158வது சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்த நந்தம்பாக்கம் ராஜ சேகரின் மனைவி கவிதா ராஜசேகர் எந்த கட்சி பணிகளும் மேற்கொள்ளாத அதிமுக எந்த பொறுப்பும் வகிக்காதவர் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கவிதாவிற்கு பதிலாக 158 வது வட்டச் செயலாளர் பர்மா கண்ணன் மனைவியும் மற்றும் அதிமுக மகளிர் அணி இணை செயலாளருமான அவ்வை நாச்சியாருக்கு சீட்டு அளிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.
கவிதாராஜசேகருக்கு சீட்டு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி 158வது வட்டம் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் அலுவலகத்தின் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏறி அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த மணிகண்டபாபு, தேவகுமார், தினேஷ் அகிய மூவரும் திடீர் போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கும்பலாக கூடி வேடிக்கை பார்க்க துவங்கியதால் காலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கீழே இறக்க முயற்சி செய்து வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டு தமிழக முதல்வரை அவதூறு பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைக் கண்டித்து இதே 158வது வட்டகழக செயலாளர் பர்மா கண்ணனின் ஆதரவாளர்கள் இதே செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications