ராப்ரி தேவிக்கு பின் 'மைக்' பிடித்து பேசாமலேயே அரசியலில் குதித்த சசிகலா!
சென்னை: பீகாரின் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்குப் பின்னர் இந்திய அரசியலில் மைக் பிடித்து பேசாமலேயே அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமைப் பொறுப்பில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையைக் கைப்பற்றுவதில் ஜெயலலிதாவின் சசிகலா மும்முரமாக இருக்கிறார்.
இதற்காக அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் தம்மை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அந்த தீர்மானத்துடன் போயஸ் கார்டனுக்கு நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெ. பாணி
சசிகலாவும் ஜெயலலிதா பாணி என நினைத்துக் கொண்டு தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்து வருகிறார். அவருடன் ஜாதி சங்கங்கள், சிறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். இத்தனைக்கும் சசிகலா அதிமுகவில் உறுப்பினரா? இல்லையா? என்பது கூட தெரியாத மர்மமாகவே இருக்கிறது.

இப்போ சின்னம்மா
ஆனால் ஜெயலலிதா மறைந்த உடன் சசிகலா நடராஜன் என்பது விகே சசிகலாவானது.. அப்புறம் இரண்டே நாளில் "சின்னம்மா" என அழைக்க உத்தரவிடப்பட்டது. இப்போது அதிமுக ஊடகங்கள் "சின்னம்மா" என்று தாரக மந்திரம்போல அழைத்து வருகின்றனர். இந்திய அரசியலில் இதற்கு முன்னர் லாலுபிரசாத்தின் மனைவி ராப்ரிதேவி அடுப்படியைவிட்டு வெளியே வராதவராக இருந்தார். அவரை பீகாரின் முதல்வராக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் லாலு பிரசாத் யாதவ்.

இன்னொரு ராப்ரி தேவி
தற்போது இதுவரை அரசியல் மேடை எதுவும் ஏறாத, மைக் பிடித்து ஒருவார்த்தையும் பேசாத சசிகலா, அதிமுக எனும் ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பேரியக்கத்தின் தலைவியாக முயற்சித்து வருகிறார். அத்துடன் அவரை முதல்வராக்கவும் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது அதிமுகவின் எதிர்பார்ப்பற்ற தொண்டர்களால் ஜீரணிக்கவே முடியாத ஒன்றாகவே தொடருகிறது. இதன்வெளிப்பாடாகவே சசிகலாவை தலைமை ஏற்க சொல்லும் போஸ்டர்கள் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக தொண்டர்களாலேயே கிழித்து எறியப்பட்டு வருகிறது.

பதவி விரும்பாத அன்றைய சசிகலா
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் சசிகலாவுக்கு அதிமுகவில் எந்த ஒரு பொறுப்பும் தரவில்லை; கவுன்சிலர், எம்.எல்.ஏ. பதவி கூட தரவும் விரும்பியதில்லை. சசிகலாவின் தகுதி அவ்வளவுதான் என நினைத்திருந்தார் ஜெயலலிதா. சசிகலாவும் கூட ஒரு சகோதரியாக மட்டுமே ஜெயலலிதாவுடன் இருக்க விரும்புகிறேன்; என் உறவினர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தது எனக்குத் தெரியாது; நான் கவுன்சிலர் பதவியையும் விரும்பியது இல்லை என்றெல்லாம் கூட அறிக்கை விட்டார்.












Click it and Unblock the Notifications