ஜெ. வீடு முன் அதிமுகவினர் தர்ணா- உள்ளாட்சி வேட்பாளர் பட்டியலில் கலைராஜன் கை ஓங்கியதாக புகார்
சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று மதியம் வெளியிடப்பட்டது. இதில் தென் சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வார்டுகளில் மாவட்ட செயலாளர் கலைராஜன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் வி.கே.பாபு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, போயஸ் கார்டனில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று காலை 12 மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

சைதை துரைசாமி
சென்னையைப் பொறுத்தவரை தற்போது மேயராக இருக்கும் சைதை துரைசாமி தனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார். இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் அவருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டு விட்டது.

வளர்மதி - கோகுல இந்திரா
அதேபோல முன்னாள் அமைச்சர் வளர்மதிதான் மேயர் வேட்பாளர் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கோ, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற கோகுல இந்திராவுக்கோ கவுன்சிலர் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் மேயர் பதவி இல்லை என்று தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்ட 200 தொகுதிகளில் வளர்மதி, கோகுல இந்திரா , செந்தமிழன் கோஷ்டியினர் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.

சென்னை மாநகராட்சி
சென்னையில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான சட்டசபை தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. அதையொட்டி நடந்த மாநகராட்சி தேர்தலிலும் அதிமுக அணியே பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியை கைப்பற்றியும் கவுன்சிலர்கள் முதல் அனைத்து தரப்பினரும் மக்கள் பணியை பின் தள்ளி கல்லா கட்டும் வேலையில் இறங்கியதாக புகார் எழுந்தது. இது பற்றிய புகார் வரும்போதெல்லாம் மேலிடம் நடவடிக்கை எடுத்து தட்டி வைத்தது. எனினும் கவுன்சிலர்களின் கல்லா கட்டும் செயல் முடிவுக்கு வரவில்லை. சென்னையின் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் கோஷ்டியை சேர்ந்தவர்களாக கவுன்சிலர்கள் இருந்ததுதான் காரணம்.

கோஷ்டியில் சிக்கிய சென்னை
சென்னையில் முக்கிய அமைச்சர்களாக இருந்த கோகுல இந்திரா, வளர்மதி , செந்தமிழன், எம்.எல்.ஏ கலைராஜன், மேயர் சைதை துரை சாமி ஆகியோருக்கு தனித்தனி கோஷ்டி இருந்தது. இதை சார்ந்தே கட்சியும் இயங்கியது. கட்சி பொறுப்பகளும் வழங்கப்பட்டன. அவ்வப்போது இதை கண்காணித்து கட்சி மேலிடம் களையெடுத்தாலும் அவர்கள் அடங்கவில்லை. மழை வெள்ளத்தின் போது ஓளிந்தனர்.

கொத்தாக அள்ளிய திமுக
இதன் விளைவு 2016 சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்தது. அமைச்சர்களாக வலம் வந்த கோகுல இந்திரா, வளர்மதி மண்ணை கவ்வினர். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக அதிக வாக்குகளை அள்ளியது. தேர்தல் தோல்வியை அடுத்து கோகுல இந்திரா , வளர்மதிக்கு இறங்கு முகம் ஆரம்பமாகியது. மேடர் ஓரங்கட்டப்பட்டார். கலைராஜனுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஆதரவாளர்களுக்கு கல்தா
தற்போது அளிக்கப்பட்ட பட்டியலில் வளர்மதி ஆதரவு கவுன்சிலர்களான ஆறுமுகம், நுங்கை மாறன், சக்தி, சிவராஜ், கற்பகம் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதே போல் கோகுல இந்திரா ஆதரவாளர்களான மல்லிகா கந்தன், ஏ.ஈ.வெங்கடேசன், சுகுமார் பாபு, செல்வி, ஜீவா போன்றோருக்கு வாய்ப்பு இல்லை.

கலைராஜன் ஆதரவாளர்கள்
கலைராஜனின் ஆட்களே இந்த முறை அதிக வாய்ப்பை பெற்றாலும் கலைராஜனின் தீவிர ஆதரவாளர்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை. ஏழுமலை, பத்மினி சுந்தரம், அலமேலு , சீதாலட்சுமி, எல்.ஐ.சி.மாணிக்கம், லியோ சுந்தரம், ஆறுமுகம் போன்றோருக்கு வாய்ப்பு இல்லை. தற்போது கலைராஜனின் ஆட்கள் சதாசிவம் , கந்தசாமி, காஞ்சனா ஜார்ஜ், முத்தழகு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் செந்தமிழன் ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

போயஸ் தோட்டம் முன் போராட்டம்
அதே நேரத்தில் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த வி.கே.பாபு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே அதிமுக தலைமையை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கியுள்ளன. தென் சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வார்டுகளில் மாவட்ட செயலாளர் கலைராஜன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் வி.கே.பாபு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, போயஸ் கார்டனில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் எங்கெங்கு போராட்டம் வெடிக்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications