அக்னி நட்சத்திரம் இன்று முதல் ஆரம்பம்… 25 நாட்களுக்கு இனி வெயில் வறுக்குமாம்!
சென்னை: அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த நாட்களில் வெயில் 110 டிகிரியைக்கூட எட்டும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் அவ்வப்போது சென்ச்சுரி அடித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவ்வப்போது பெய்த கோடை மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. காலையில் கடுமையான வெயில் அடித்தாலும், மாலையில் அது அப்படியே தலைகீழாக மாறி விடுகிறது. இந்த நிலை மூன்று வாரத்திற்கும் மேலாக தொடர்ந்தது.
நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் பெய்யும் மழை அளவை விட இது சற்று கூடுதலாகும். இந்த கோடை மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சுத்தமாக மழை இல்லை. வெயில் வறுத்தெடுத்தது. கோடை காலத்தில் மக்கள் அதிகம் பயப்படுவது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலத்திற்கு தான். அந்த அக்னி நட்சத்திர காலத்தில் சூரியனின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

அக்னி நட்சத்திரம்
கோடையின் உச்சமாக கருத்தப்படும் கத்தரி வெயில் இன்று 4ம் தேதி தொடங்குகிறது. வரும் 29ஆம் தேதி வரை இந்த கத்தரி வெயில் தொடரும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இந்த ஆணடு அதிகபட்சமாக 110 டிகிரி வரை கோடை வெப்பம் பதிவாகலாம் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

வெயில் வறுத்தெடுக்கும்
இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், அடுத்த 4 வாரங்களுககு அக்னி வெயில் வறுத்தெடுக்கும். அதே நேரம் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்யலாம் என தெரிவித்தனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவகாற்று அடுத்த மாதம் கேரளாவில் தொடங்கும். இதனால் வெயிலின் தாக்கம் ஜூன் மாதத்தில் இருநது படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.

என்ன செய்யலாம்
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம்.

ஐஸ், ஜில் பானங்கள் வேண்டாம்
கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ்அமர்ந்து, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது. குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

நிறைய தண்ணீர்
காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகள் மற்றும் பான்பராக், பாக்கு போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

மீன் சாப்பிடாதீங்க
அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். மீன்கள் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியும், சைனஸ் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

நீங்க தப்பிக்கலாம்
கோடை காலங்களில் இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர். வருணபகவான் மனது வைத்தாலும் அக்னியின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications