மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் கிடைத்தது.. செந்திலுக்குத் தொடர்கிறது சிறைவாசம்!
மதுரை: வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்னொருவரான வேளாண் செயற்பொறியாளர் செந்திலின் சிறைவாசம் தொடர்கிறது.

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துக்குமாரசாமியின் முடிவுக்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுகவினர் கொடுத்த கடும் நெருக்கடி மற்றும் மன உளைச்சலே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை கையில் எடுக்கவே வேறு வழியில்லாமல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அக்ரி. இதையடுத்து கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் செயற்பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். அங்கு அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அக்ரி சார்பி்ல மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 2 முறை மனு செய்யப்பட்டு 2 முறையும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 3வது முறையாக அவர் மனு செய்திருந்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி கல்யாணசுந்தரம் இன்று நிபந்தனை ஜாமீனில் அக்ரியை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
