முதல்வராக எடப்பாடியே தொடர அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்- 111 பேர் ஆதரவு!
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர ஆதரவு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 111 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தது.

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
அத்துடன் மேலும் சில எம்.எல்.ஏக்களும் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனிடையே சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் நேரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

111 எம்.எல்.ஏக்கள்
இக்கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் 111 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சட்டசபை குழு தலைவராக எடப்பாடி நீடிக்க ஆதரவு
இக்கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதாவது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளை ஏற்பதாகவும் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

112 எம்.எல்.ஏக்கள்
இந்த கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மொத்தம் 111 எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராஜ் உடல்நலக் குறைவால் கலந்து கொள்ளவில்லை. கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

மொத்தம் எத்தனை எம்.எல்.ஏக்கள்?
ஜெயக்குமார் கணக்குப்படி 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் பெரும்பான்மையானோர் கலந்து கொண்டதாகவும் ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications