சட்டசபை தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ள அதிமுக திட்டம்? சத்தமின்றி நடக்கிறது தேர்தல் ஆயத்தம்!
சென்னை: 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., சத்தமின்றி தயாராகி வருகிறது. ஒவ்வொரு பூத்திலும், 90 வாக்காளர்களுக்கு ஒரு கமிட்டி உறுப்பினர் என்ற வகையில், நிர்வாகிகள் நியமனம் நடக்கிறது.
தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு மாற்றாக உருவெடுக்க பா.ஜ.க, மும்முரம் காட்டி வருகிறது. எனவே கால அவகாசம் கொடுக்காமல் பாஜகவை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் ஈஸி கிடையாது
கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல், சட்டசபை தேர்தல் அ.தி.மு.க.,விற்கு அவ்வளவு லகுவாக இருக்காது என்று அக்கட்சியினருக்குள்ளேயே எண்ணம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவை குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது இதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தற்போதே வியூகம் அமைத்து வருகிறது அதிமுக.

நிர்வாகிகள் மாற்றம் இருக்காது
அ.தி.மு.க.,வில் மிகப்பெரிய அளவில் புகார் உள்ள நிர்வாகிகள், மற்ற கட்சியினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள நிர்வாகிகளை மட்டும் மாற்ற வேண்டுமே தவிர, மற்றபடி ஏற்கனவே உள்ள நிர்வாகிகளின் செயல்பாடு நன்றாக இருந்தால் அவர்களையே மீண்டும் உள்கட்சி தேர்தலின்போது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, அ.தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வு ஜரூர்
மேலிட உத்தரவுப்படியே, நிர்வாகிகள் தேர்வும் நடந்து வருகிறது. முதல் கட்டமாக நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டு, மற்றும் ஊராட்சி கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்வு முடிந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் எல்லா பூத்களிலும் கமிட்டி நியமனம் முடிந்து விட்டது.

90 வாக்காளருக்கு ஒரு கமிட்டி மெம்பர்
பூத் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், 90 வாக்காளர்களுக்கு ஒரு கமிட்டி உறுப்பினர் என்ற அடிப்படையில் நியமனம் நடந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு பூத்திற்கும் குறைந்தது, 16 பேர் முதல் அதிகபட்சமாக, 25 பேர் வரை கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பூத் கமிட்டி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கையில் வைத்துக்கொண்டு, அவர்களுடன் நெருக்கமாக தொடர்பு ஏற்படுத்தி, அவர்களை தக்க வைத்துக் கொள்வதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபணி.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்கய்யா
தங்களுக்கு வழங்கப்பட்ட, 90 வாக்காளர்கள் யார், எங்கெங்கு உள்ளனர். எங்கெங்கு பணிபுரிகின்றனர். இதில் எத்தனை பேர் மாற்றுக் கட்சியினர்? எத்தனை பேர் நடுநிலையாளர்கள். எத்தனை பேர் அ.தி.மு.க.,வினர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். அத்தனை பேர் வாக்குகளையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அள்ளியது போல் சட்டசபையிலும் அள்ள ஒவ்வொருரின் மனநிலையையும் எப்படி அறிந்து மாற்றுவது. அவர்களிடம் பழகுவது உட்பட எல்லா வியூகங்களும் பூத் கமிட்டியினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி, தற்போது வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு சரிபார்ப்பு பணிகளில் இறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications