சுப்ரீம் கோர்ட்டில் குக்கர்... ஹைகோர்ட்டில் கொடி - தினகரனை எதிர்க்கும் முதல்வர்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொடிக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அமமுகவின் கொடி அதிமுக கொடி போல் உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுத்தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அனுமதியளித்துள்ளார்
இதனையடுத்து அமமுக அமைப்பின் கொடியை நாளிதழ் விளம்பரங்களில் பயன்படுத்த தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் கொடியில் அண்ணாவின் படம் உள்ளது போல் டிடிவி தினகரனின் கொடியில் ஜெயலலிதாவின் படத்தை அச்சிட்டுள்ளார் தினகரன்.
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சை உறுப்பினராக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

டிடிவி தினகரன் சின்னம்
அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பெற்றே தீர வேண்டும் என்பதில் தினகரன் முனைப்பு காட்டி வருகிறார். குக்கர் சின்னத்தையும் போராடி வென்றுள்ளார். அமமுக என்ற புதிய அமைப்பை தொடங்கி இனி வரும் காலங்களில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு நேற்று மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். தனது அமைப்பின் கொடியில் கருப்பு, வெள்ளை, சிகப்பு நிறத்தையும் நடுவில் ஜெயலலிதாவின் உருவத்தையும் இடம் பெறச் செய்துள்ளார்.

ஜெயலலிதா உருவம்
அதிமுக கொடியில் அண்ணாவின் உருவமும், அமமுக கொடியில் ஜெயலலிதாவின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி அணி ஏற்கெனவே நிபந்தனை விதித்த நிலையில் அதிமுகவின் கறுப்பு வெள்ளை சிவப்பு நிறம் கொண்ட கொடியில் ஜெயலலிதாவின் உருவத்தையும் இணைத்து கொடியை அறிமுகப்படுத்தினார்.

குக்கருக்கு எதிராக வழக்கு
ஏற்கனவே தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இப்போது அமைப்பின் கொடியை பயன்படுத்தவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரப்படுத்த கூடாது
தினகரன் அமைப்பின் கொடி அதிமுக கொடி போல உள்ளது. ஜெயலலிதாவின் உருவத்தையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த கொடியை அமமுக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். நாளிதழ் விளம்பரங்களில் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications