அட்சய திருதியை: செல்வம் வளம் தரும் ரத்னமங்கலம் லட்சுமி குபேரர்
சென்னை: செல்வத்துக்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும். இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம்.
ரத்னமங்கலம் குபேரரையும் ஸ்ரீலட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவிலேயே ஸ்ரீலட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை ரத்னமங்கலத்தில் உள்ள இக்கோவில் பெற்றுள்ளது. திருப்பதி செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் சிறப்பானது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

லட்சுமி குபேரர்
குபேரன் காட்சி தரும் கோலமே பெரும் பரவசத்தை ஏற்படுத்தும். சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

குபேரலிங்கம்
கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமிகணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளன. கோசாலையும் உள்ளது.

குபேரபூஜை
வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும்.

இலங்கையின் அதிபதி
பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே ராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான்.

ராவணன் சதி
குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும், புராண கதைகள் கூறுகின்றன.

தவம் செய்த குபேரன்
குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லை என்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது.

கண்ணில்லாத குபேரன்
இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள். குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான்.

செல்வத்திற்கு அதிபதி
குபேரனின் கண்ணுக்கு பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான்.
அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.
அதன்பின், லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள்.

அட்சய திருதியை நாளில் பூஜை
பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமிதான். ரத்ன மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் கோவிலில் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள் தங்கள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை குபேர லட்சுமியிடம் வைத்தும் அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசிபெறலாம்.

சிறப்பு பூஜைகள்
வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சுக்ர ஓரை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன், கோ பூஜை செய்து சுக்ரனின்
அதிதேவதையான குபேர லட்சுமி ஆராதனையும் அதை தொடர்ந்து மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமும், ஸ்ரீசுத்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அன்று நாள் முழுவதும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்லோகம் படித்து பக்தர்கள் பூஜை செய்வார்கள்.

குபேரன் சிலை
பூஜையில் அமரும் பக்தர்களுக்கு நாணயங்களும், சிறிய குபேரன் சிலையும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியை சிறப்பு பிரசாதமான ஹரி பலம் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

அமாவாசை தினத்தில்
ரத்னமங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் சன்னதியில் அமாவாசையில் விசேஷபூஜைகள்,ஹோமம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விஸ்வரூபதரிசனத்துடன் நடை திறக்கப்ப்ட்டு, கோபூஜை அட்சயபாத்திர அதிஷ்டலட்சுமிபூஜை,நாணயத்தால் குபேர பூஜை செய்து சிற்ப்பு தீபாராதனை நடைபெறும்.

எப்படி செல்லலாம்
வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் பாதையில் ரத்ன மங்கலத்தில் உள்ளது இந்த அழகிய ஆலயம். அட்சய திருதியை நாளில் லட்சுமி குபேரரை வணங்கி ஆசி பெறுவோம்.












Click it and Unblock the Notifications