ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!
தென்காசி: ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில், ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நேற்று முன்தினம் நெட்டூரில் நடந்த திருமண விழாவில் புகுந்த கும்பல் ஒன்று, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை சரமாரியாக வெட்டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நெட்டூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 3 சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் உள்ள வாலிபர் ஒருவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக மணமகன் வீட்டை சேர்ந்த நபர்களுக்கும் மதுபோதையில் அங்கு வந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் அவரைச் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications