தென்காசியில் சுதாவுக்கு தில்லு! ஆலங்குளத்தில் பேரூராட்சி தலைவர் சொத்து வரி கட்டலயாம்.. பறந்த ஆக்ஷன்
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீது ஏகப்பட்ட புகார்களும், குற்றச்சாட்டுகளும் வலம்வந்தவாறே இருந்தது.. அதனால்தான், அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பேரூராட்சி உறுப்பினர்கள் ஏற்கெனவே கொண்டுவந்தனர். ஆனால், வாக்கெடுப்பு நடப்பதற்குள் பேரூராட்சி தலைவர் ப்ரோமோஷன் ஆகி சென்றுவிட்டார். இந்நிலையில், சொத்துவரி விவகாரத்தில் மீண்டும் சிக்கி ஆலங்குளம் பேரூராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகளை இழந்துள்ளார் சுதா.
சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், நிலம் வைத்திருப்பவர்கள் என உரிமையாளர்களிடம் அந்தந்த மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். இந்த வருவாய்தான், மாநகராட்சிகளுக்கு முக்கிய வருவாய் இனமாக திகழ்ந்து வருகிறது.

இந்த வருவாயை வைத்துதான், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவேதான், உரிய காலக்கட்டத்தில் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக சலுகைகளும் வழங்கப்படுகின்றன..
சொத்து வரி அவசியம்
வீடு, நிலம், வணிகக் கட்டிடம் போன்ற தனிப்பட்ட சொத்துகளுக்கு சொத்து வரியை (Property Tax) கட்ட வேண்டியது அனைவரது கடமையாகும்.. இதற்கு பேரூராட்சி தலைவர் (Town Panchayat Chairman) என்பவரும் விதிவிலக்கல்ல.. காரணம், அரசு பதவியை வகித்தாலும், அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் "அரசுச் சொத்து" ஆகாது.
அந்த சொத்துக்கள் மீது சட்டப்படி விதிக்கப்படும் வரிகள் அனைத்தும் கட்ட வேண்டிய கடமையாகும். அதுமட்டுமல்ல, பேரூராட்சி தலைவரே முன்வந்து வரியை கட்டிவிடும்போது, அம்மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ முடியும்.
தென்காசி ஆலங்குளம் பேரூராட்சி தலைவர்
ஆனால், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா, சொத்து வரியை கட்டவில்லையாம். ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவை சேர்ந்தவர் சுதா மோகன்லால்.. இவர் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருபவர்..
இவர் தனக்கு சொந்தமான 8 சொத்துகளுக்கு கடந்த 2022-23ல் சொத்துவரியை செலுத்தவில்லையாம்.. இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், சொத்துவரியை செலுத்தாமல் இருந்துள்ளார் சுதா.
சொத்துக்களுக்கு வரி
முதல் அரையாண்டுக்கு ஒரு சொத்துக்கு மட்டும் வரியை செலுத்தி, மற்ற 7 சொத்துகளுக்கு வரி செலுத்தவில்லையாம். அதேபோல 2ம் அரையாண்டுக்கான 8 சொத்துகளுக்கும் வரியை செலுத்தாமலும் இருந்துள்ளார்.
சுதா சொத்து வரியை செலுத்தவில்லை என்ற விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார் 9வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ்,.. உடனே சுதா மோகன்லாலை வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் மனு அளித்தார்.
தகுதி நீக்கம் உத்தரவு
இந்த புகார் மீது விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுதா, தன்னுடைய 7 சொத்துக்களுக்கும் சொத்துவரி கட்டாதது உறுதியானது.. உடனே இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்க பேரூராட்சிகள் இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.
இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவரின் ஆணையை செயல்படுத்தக் கோரி மதுரை ஹைகோர்ட்டில் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கு தொடுத்தார்.. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுதா மோகன்லாலை 3 மாதத்துக்குள் தகுதி நீக்கம் செய்யவும், அந்த விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆலங்குளம் பேரூராட்சி தலைவருக்கு செயல் அலுவலர் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், பேரூராட்சி தலைவர் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
கவுன்சிலர், தலைவர் பதவி பறிபோனது
இதற்குள் கோர்ட் விதித்த காலக்கெடு முடிந்தும், நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மறுபடியும் மதுரை கோர்ட்டில் கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆலங்குளம் பேரூராட்சிமன்ற 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து சுதா, தகுதி இழந்ததாக பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வெங்கட கோபு தற்போது அறிவித்துள்ளார்.
ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாததால், பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவியை சுதா மோகன்லால் இழந்துள்ளது தென்காசியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications