For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பி.எஸ்., சசிகலா, தீபா.. ஜெ. மரணத்தை, ஆளாளுக்கு அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தும் கொடுமை!

அதிமுகவில் ஆளாளுக்கு தங்களுக்கு அரசியல் லாபம் என கருதும் நேரத்தில் எல்லாம் ஜெயலலிதா மரணத்தை வைத்து விளையாடிக்கொண்டுள்ளனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அவருக்கு நெருக்கமாக இருந்த ஒவ்வொருவருமே அரசியல் செய்கிறார்களே தவிர உண்மைான அக்கறையுடன் யாருமே செயல்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.

ஜெயலலிதா மறைந்தபோது உண்மையான உள்ளக்குமுறலுடன் கண்ணீர் வடித்த பொதுமக்களை தவிர, அவர் உண்மையான பாசம் கொண்ட யாரையும் தனது சொத்தாக சேர்க்கவில்லையோ என்று அச்சம் எழும் அளவுக்கு தற்போது பல செயல்கள் அரங்கேறி வருகின்றன.

ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது என்று அறிந்துகொள்ள ஒருவருக்குமே உண்மையாக உள்ளம் துடிக்கவில்லையா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. அது ஏன் என்பதை நீங்களே பாருங்கள்.

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கியவர் பன்னீர்செல்வம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இவரையும் ஜெயலலிதாவை சந்திக்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. 75 நாட்கள் கழித்து திடீரென ஜெயலலிதா மரணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வம் அதுகுறித்து எந்த கேள்வியையும் கேட்காமல் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். சசிகலா முதல்வராக காய் நகர்த்தும்போதுதான், ஓ.பி.எஸ், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வாய் திறந்தார். டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், பிப்ரவரியில்தான் பன்னீர்செல்வம் சந்தேகம் கிளப்பினார்.

தீபா

தீபா

ஜெயலலிதாவின் ரத்த சம்மந்தம் உள்ளவர் என்பதாலேயே அதிமுக பெண் தொண்டர்களிடம் வரவேற்பை பெற்றவர் தீபா. இவரைத்தான் அநியாயத்தை தட்டிக்கேட்க வந்த பரதேவதையாக அடிமட்ட பெண் தொண்டர்கள் கருதியிருந்தனர். ஆனால் ஊரே சந்தேகப்பட்ட நேரத்திலும், இவர், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சினை கிளப்பிய பிறகு, நீதி விசாரணை நடத்தினால் நல்லது என்றார் தீபா. ரத்த சம்மந்தம் கொண்ட தீபா சட்டப்பூர்வமாகவே கோர்ட்டை அணுகி தனது அத்தை உடல்நிலை குறித்து கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காமல் ஜகா வாங்குவதன் பின்னணி என்ன?

தீபக்

தீபக்

இவர் சசிகலாவை தனது இன்னொரு அம்மா என்று கூறிவந்தார். ஆனால், சசிகலா சிறை சென்றதும், அவரது அக்கா மகனான தினகரனை கட்சி தலைமைக்கு ஏற்க மறுத்தார். ஜெயலலிதா மறைவில் நீதி விசாரணை நடக்கட்டும். உண்மை வெளிவரட்டும் என்றும் பேட்டியளித்தார். ஜெயலலிதா உடலுக்கு இறுதி சடங்கு செய்த அவரின் அண்ணன் மகன், தீபக்கிற்கு அப்போது ஏற்படாத சந்தேகம், தினகரன், அதிமுக துணை பொதுச்செயலராக பதவியேற்ற பிறகு வந்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பொன்னையன் பல்டி

பொன்னையன் பல்டி

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பொன்னையன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாதான் அதிமுக தலைமைக்கு வர வேண்டும் என்று கொடி பிடித்தவர். சிட்பண்டில் நாமினியாக சசிகலா பெயரை முன்பு ஒருமுறை ஜெயலலிதா குறிப்பிட்டதை வைத்து, அவர்தான் அரசியல்வாரிசு என்று ஆணித்தரமாக வாதம் எடுத்து வைத்து அகில உலகையே நிமிர்ந்து பார்க்கச் செய்த அசகாய சூரன். ஆனால், ஓ.பி.எஸ் தனியாக பிரிந்து வந்தபிறகு, சசிகலா தரப்பில் பொன்னையனுக்கும் போதிய முக்கியத்துவம் தராததால் திடீரென ஓ.பி.எஸ் பக்கம் வந்தார். இப்போது திடீரென ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என இவரும் பல்லவி பாட ஆரம்பித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. அட்மிட் செய்யப்பட்டபோதே, மயக்கத்தில் இருந்ததாகவும் இவர் கூறி வருகிறார்.

சசிகலா தரப்பு

சசிகலா தரப்பு

ஊரே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறும்போது, வாயை திறக்கமாட்டேன் என அடம்பிடித்தது சசிகலா தரப்பு. அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று உணர்ச்சிகர உரையாற்றும்போதும் சசிகலா அதுபற்றி பேசவில்லை. முதல்வர் நாற்காலியை நோக்கி நகர ஆரம்பித்தபோது அப்பல்லோ மருத்துவர்களை கொண்டு பிரஸ் மீட் வைத்தது அரசு தரப்பு. அதற்குள் வதந்தி றெக்கை கட்டி பறந்துவிட்டிருந்தது. இப்போது திடீரென அமைச்சர் செங்கோட்டையன், தான் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை பார்த்ததாகவும், ரெட்டை விரலை ஆட்டி காண்பித்ததாகவும் கூறியுள்ளார். இதுவும் தனது தலைமையை காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான். ஏனெனில் அவர் ஏன் இத்தனை மாதங்களாக இதை கூறவில்லை என்ற கேள்வியே அதற்கு சான்று.

ஆதாயமே நோக்கம்

ஆதாயமே நோக்கம்

இப்படி ஆளாளுக்கு தங்களுக்கு அரசியல் லாபம் என கருதும் நேரத்தில் எல்லாம் ஜெயலலிதா மரணத்தை வைத்து விளையாடிக்கொண்டுள்ளனர். நாட்டின் குடிமக்களுக்கு தங்களை ஆட்சி செய்த முதல்வருக்கு என்ன நேர்ந்தது என்ற இயல்பான துடிப்பு இருக்கும் என்பதை இந்த அரசியல்வாதிகள் மதித்ததாக தெரியவில்லை.

English summary
All the AIADMKians are playing political game with Jayalalitha demise, as they are raising the issue when they wants political mileage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X