ஜெ., வழியில் அதிமுக அரசு... ஈபிஎஸ் கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
முதல்வர் ஈபிஎஸ் வாகனங்கள் கடப்பதற்காக சென்னையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட போக்குவரத்தை நிறுத்தியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கான்வாய் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக சென்னையின் முக்கிய சாலையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது ஜெயலலிதா போலவே மாறி வருகிறார். முன்பெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவிற்காக போக்குவரத்து தடுத்து நிறுத்தப்படும். மணிக்கணக்கில் கூட சாலைகளில் மக்கள் காத்திருப்பார்கள். காலப்போக்கில் அது மாறியது.
ஓபிஎஸ் முதல்வரான பின்னர் அந்த பந்தா எல்லாம் செய்யவில்லை. மக்களோடு மக்களாக சாலைகளில் பயணித்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் அவரது கான்வாய் செல்ல போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

ஈபிஎஸ் கான்வாய்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்துக்கு கான்வாய் வாகனங்களுடன் சென்றார். அப்போது விமான நிலையம் நோக்கி செல்லும் முக்கிய சாலையில் அவரது கான்வாய் வாகனங்கள் கடக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர்.

நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்தில் சிக்கியது. இதனால் அங்கிருந்த வாகனஓட்டிகள் போலீஸாரிடம், விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி கொடுததுக்கொண்டிருக்கிறார். அவர் வரும் வரை நாங்கள் ஏன் இங்கு காத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆம்புலன்ஸ் வாகனத்தையாவது அனுப்புங்கள் என்றனர்.
|
பொதுமக்கள் அதிருப்தி
ஆனால் போலீஸாரோ அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. முதல்வரின் வாகனங்கள் கடந்த பிறகே போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சாலையில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ஜெ., வழியில் ஈபிஎஸ்
ஜெயலலிதா இருந்தபோதும் அவர் கோட்டைக்கு செல்லும் சாலை, விமான நிலையம் செல்லும் சாலை, அவர் எந்த ஊர் சென்றாலும் அங்கு வாகன போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்படும். அவரது வாகனங்கள் கடந்த பிறகே மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும். அந்த நிலையை தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்ற தொடங்கிவிட்டாரோ?. இதுதான் அம்மாவின் வழியில் அதிமுக அரசா?












Click it and Unblock the Notifications