கச்சா எண்ணெய் கசிவை அகற்றுவதில் அலட்சியம்- கடல் உயிரினங்கள் பாதிப்பு: அன்புமணி
கச்சா எண்ணெய் கசிவால் அழியும் கடல் உயிரினங்ளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கடந்த 28ஆம் தேதி அதிகாலை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈரானிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணைய் ஏற்றி வந்த கப்பலும், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதன் காரணமாக கடல் கருமை நிறமாக மாறியது.
எண்ணெய் படலம் கடல் மேற்பரப்பை மூடியதால், கடல் நீரில் சூரிய வெளிச்சம் மற்றும் பிராண வாயு குறைந்து மீன், ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரிணங்கள் செத்து மிதக்கின்றன. இந்நிலையில், இந்திய கடலோர காவற்படையின் சுற்றுசூழல் பொறுப்புக்குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கச்சா எண்ணெய் அதிகம் படர்ந்துள்ள எர்ணாவூர் பாரதியார் நகரில், ஆயில் மாப் ஸ்கிம்மர் மற்றும் சர்பன்ட் அப்சர்வர் என்ற இயந்திரங்களை பயன்படுத்தி, தண்ணீரில் இருந்து எண்ணெயை பிரித்தெடுக்கும் பணியை நேற்று தொடங்கினர்.

வீட்டில் உபயோகப்படுத்தப்படும் மாப் போன்ற செயல்பாடுகளைக் கொண்ட இந்த இரண்டு எந்திரங்களும் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெயை முழுவதுமாக பிரித்தெடுக்கும் திறன் கொண்டவை. இந்நிலையில் எந்திரங்களின் கயிறு அறுந்து போனதால் நேற்று பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே, எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கச்சா எண்ணெய் கசிவு பரவி நிலைமை மோசமடைந்துள்ளதால், கயிறுகள் சரிசெய்யப்பட்டு இன்று மீண்டும் தூய்மை பணி தொடங்கியது. ஆனால், பணிகள் துவங்கிய சில மணி நேரத்தில் இயந்திரம் பழுதடைந்ததால், எண்ணெய்யை பிரித்தெடுத்து தூய்மைபடுத்தும் பணி, தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
மும்பையில் இருந்து ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்யும் குழுவினருடன் வந்த அதிகாரிகள் உடைந்த கப்பலை ஆய்வு செய்தனர். 2 கடல் மைல் தொலைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ள கப்பல் இன்று பைலட் கப்பல் மூலம் துறைமுகத்திற்கு இழுத்து வரப்படவுள்ளது.
இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவரும் லோக்சபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸ், எண்ணெயை அகற்றும் முயற்சியில் வெற்றி கிடைக்காத நிலையில் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார். எண்ணெயை அகற்றும் நடவடிக்கையில் அரசும், துறைமுகம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
