தேர்தல் வருவதால் அரசியல் செய்கிறார் விஜயகாந்த்.. அன்புமணி மீண்டும் அட்டாக்
அரியலூர்: தேர்தல் வருவதால் விஜயகாந்த் அரசியல் செய்ய வந்துள்ளார். அவருடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது என்று தெரிவித்துள்ளார் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சோழ மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.

மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "தமிழகத்தில் பா.ம.க. பெரிய கட்சியாக உருவெடுத்து வருகிறது. நாங்கள் இளைஞர்களை மட்டுமே நம்பி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.
தமிழகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்தன. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்ற முடிவுக்கு வந்து உள்ளனர். நாங்கள் தற்போது முழுமையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம்.
தற்போது உள்ள எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், கடந்த 4 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை. தேர்தல் நெருங்குவதால் இப்போது அவர் அரசியல் செய்ய வந்துள்ளார். எங்கள் கட்சியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததுபோல் மற்ற கட்சியினர் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்களா?
தமிழக சட்டசபையில் தற்போது எதிர்க்கட்சியினர் யாரும் பேச முடியாத சூழ்நிலை உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சியினருக்கு 70 சதவீதம் பேசுவதற்கு வாய்ப்பு அளிப்போம்.
எதிர்க்கட்சியினர் கூறும் கருத்துக்களை, ஆலோசனைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு திறமையான ஆட்சியை நடத்துவோம். நாங்கள் எந்த கூட்டணியையும் நம்பவில்லை. யாருடனும் கூட்டணி சேரமாட்டோம். மக்களாகிய உங்களை நோக்கியே கூட்டணி வைத்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications