பாஜக கூட்டணியில் பாமக நீடிப்பா? நயினார் நாகேந்திரனுக்கு 'நோஸ் கட்'-மழுப்பலாக பதில் தந்த அன்புமணி!
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக நீடிக்கிறதா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். பாஜக கூட்டணியில் பாமகவும் நீடிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அன்புமணி ராமதாஸின் இந்த மழுப்பலான பதில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றிருந்தது. 2021 தமிழக சட்டசபை தேர்தல், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தது பாமக.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் வெடித்தது. இதனால் பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அன்புமணிக்கு பதிலாக நிறுவனராகிய தாமே பாமகவின் தலைவராகவும் பதவி வகிப்பேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
ஆனால் அன்புமணி ராமதாஸோ, தாம் பாமகவின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்; தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளேன்; ஆகையால் நானே தலைவர் என்றார். இதனால் பாமகவில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாமகவில் ஏற்பட்ட இந்த குழப்பத்துக்கு காரணமே கூட்டணி விவகாரம்தான் எனவும் கூறப்பட்டது. அன்புமணி ராமதாஸைப் பொறுத்தவரையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடிக்க வேண்டும் என்பது நிலைப்பாடாம். ஆனால் ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம். அன்புமணியைப் பொறுத்தவரையில் பாஜக கூட்டணியில் நீடித்தால் மீண்டும் ராஜ்யசபா எம்பியாகி மத்திய அமைச்சராக முடியும் என்பது கருத்து எனவும் சொல்லப்பட்டது.
பாமகவில் ஏற்பட்ட இந்த குழப்பங்களுக்கு நடுவே, தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாமகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் நேரடியாக பதிலளிக்காமல், பின்னர் பதில் தருவதாக மட்டுமே கூறினார். பாஜக கூட்டணியில் பாமக நீடிக்குமா? என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் மழுப்பலாக பதிலளித்துள்ளது அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications