ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்கவிமான குடமுழுக்கு கோலாகலம்... சசிகலா தரிசனம் செய்தார்
சென்னை: ஸ்ரீவில்லிப்புத்தூர் ரங்கமன்னார் சமேத நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில் தங்கவிமானம் பொருத்தப்பட்ட ராஜகோபுர குடமுழுக்கு விழா விமரிசையாக நிறைவு பெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நாச்சியார் திருமாளிகை என்று அழைக்கப்படும் ஆண்டாள் கோவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இதனையடுத்து கோவிலில் உள்ள தங்கவிமானம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க விமானத்தைவிட பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது. ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் 78 கிலோ தங்கத்தில் இந்த தங்கவிமானம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தங்க விமானத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை 10.05 மணியளவில் ஆகம முறைப்படி விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீகோதா கருட சமேத ராஜகோபாலசாமி நூதன தங்க விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து வஸ்திரம், பட்டுப் புடவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு சாத்தப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு பின் இந்த கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்காணோர் வந்து ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்து வருகின்றனர். இன்றைய குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் வெள்ளமென கலந்து கொண்டு ஆண்டாளின் அருள்மழையில் நனைந்தனர்.
கருட வருகையினை அடுத்து பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே தங்கக் கலசத்திற்கு கலசாபிஷேகம் நடைபெற்றது
தங்கவிமானம் பொருத்தப்பட்ட ராஜகோபுரத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டது. இதனை அங்கு குவிந்துள்ள லட்சோபலட்சம் பக்தர்கள் மனநிறைவுடன் தரிசனம் செய்து அருள் பெற்றுள்ளனர்.
இந்த விழாவில் ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா, கோவில் தக்கார் ரவிச்சந்திரன், வி.பி.எம்.எம் கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர், வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கம், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications