ஜாமீனுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் செந்தில் பாலாஜி.. சொந்த மண்ணில் விளாசிய அண்ணாமலை!
கரூர்: என் மண் என் மக்கள் பயணத்தின் 100வது நாளான நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த பயணத்தின் 100வது நாளான நேற்று (பிப்ரவரி 21) 225 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, தான் பிறந்து வளர்ந்த மண்ணான, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை.

அண்ணாமலை பிறந்து வளர்ந்த மண்: அண்ணாமலை பேசுகையில், "நான் பிறந்து வளர்ந்த மண்ணான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நிற்கிறேன். இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்ற முதல் யாத்திரை நமது என் மண் என் மக்கள் யாத்திரைதான். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்றதில் அறிந்து கொண்ட உண்மை, தமிழக மக்கள் அரசியலில் நேர்மையான மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜகவின் யாத்திரையாக ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. திமுக அரசின் 33 மாத கால ஊழல் ஆட்சியைத் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சியின் சாதனைகளை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்கிறோம். நமது என் மண் என் மக்கள் பயணத்தின் 234 ஆவது தொகுதி நிறைவு விழா, வரும் பிப்ரவரி 27 அன்று, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் நடைபெறவிருக்கிறது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாபெரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார். பிற மாநிலங்களை விட தமிழகத்துக்கு நமது பிரதமர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
தமிழக அரசியல் நேர்மையாக இருந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த, தலைவர்கள் அனைவரும் இன்று பாஜகவில் இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி பாஜகவால் மட்டும்தான் தர முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், நமது நாடு எப்படி இருக்க வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலை நோக்குச் சிந்தனையோடு செயல்பட்டு வருவதால், கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜக, இன்று 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
அரவக்குறிச்சி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லை. வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மூன்று நதிகள் அருகில் ஓடியும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. இவை அனைத்தும் மாற வேண்டும். கரூரில், விவசாயம், நீர் மேலாண்மை, தொலை நோக்குப் பார்வையோடு திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் வர வேண்டும். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தொகுதியை முன்னேற்றுவதை விட, தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள்.

செந்தில் பாலாஜி: தொகுதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது பண மோசடி வழக்கில் 280 நாட்களாக சிறையில் இருக்கிறார். இத்தனை நாட்களாக, துறை இல்லாத அமைச்சராக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்ற அவர், இப்போதுதான் ஜாமீன் கிடைப்பதற்காக பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது தம்பி 280 நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார். திமுகவில் 16 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் பல அமைச்சர்கள் சிறைக்குச் செல்ல நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தை திமுக கடன்கார மாநிலமாக மாற்றியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடி கடனில் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடனாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மொத்தம் ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் கோடி கடன் தமிழகத்துக்கு இருக்கிறது. இந்தக் கடனை அடைக்கவே இன்னும் 86 ஆண்டுகள் ஆகும். கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடுகிறது திமுக. திமுக பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி அடையாறு நதியை சுத்தம் செய்ய ஒதுக்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். இரண்டு ஆண்டுகளில் ரூ.3,000 கோடிக்கு செலவு செய்ய அடையாற்றில் என்ன இருக்கிறது? ஐந்து ஆண்டுகளில் 3.5 லட்சம் அரசு வேலை வழங்குவோம் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில் இதுவரை 10,600 பேருக்கு மட்டும்தான் அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளில் முன்பு போன்ற சிறந்த தலைவர்கள் இல்லை. தங்களை வளப்படுத்திக் கொள்ள விரும்பும் தலைவர்கள்தான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும்: 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அடுத்த மூன்று ஆண்டுகளில், திமுகவினருக்கு வருமானம் வருவதற்காக மட்டுமே நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளுக்கடைகளைத் திறப்போம். பனைமரம் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கச் செய்வோம். இதுவரை அரசு வேலை கிடைக்கப்பெறாத குடும்பத்து இளைஞர்களுக்கு, அரசு வேலைகளில் முன்னுரிமை கொடுப்போம். கிராமப்புற மாணவர்களுக்கும் உலகத்தரமான கல்வி கிடைக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நவோதயா பள்ளிகளை "காமராஜர் பள்ளி" என்ற பெயரில் அமைப்போம். நீர் மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவோம். காவல்துறையின் உண்மையான நண்பன் பாஜக தான். திமுக காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்துகிறது. காவல்துறையை நாங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்வோம். காவல்துறையினரின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். 8 மணி நேர வேலை நேரம் காவல்துறையினருக்கும் கொண்டு வரப்படும்.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு, 2024 ஆம் ஆண்டு நமது பிரதமர் மோடி அவர்களின் மூன்றாவது முறை ஆட்சியில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்சியாக அமைவார்கள். 2024 முதல் 2026 வரை பாஜகவின் ஆட்சியைப் பார்த்துவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுங்கள்.

தலைவன் - தொண்டன்: தலைவன், தொண்டன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படும் கட்சி பாஜக மட்டுமே. அற்புதமான சித்தாந்தம் உள்ள கட்சி. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை அரசியல்வாதியான நான் மாநிலத் தலைவராக உயர்ந்துள்ளது இதற்கு ஒரு உதாரணம். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், என அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று, வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாக தங்கள் அன்பையும், ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகிவிட்டது. ஒவ்வொரு தமிழரும் மோடி அவர்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகத் தலைவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். நாட்டின் வளர்ச்சி மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி நடைபெறுகிறது. பிரதமர் அமைச்சரவையில் உள்ள 75 அமைச்சர்களில் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. தமிழகத்திலும், நாடு முழுவதும், ஊழல் இல்லாத, குடும்ப ஆட்சி இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று நமது பிரதமர் விரும்புகிறார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாக 400 இடங்களுக்கும் அதிகமாகப் பெற்றுப் பொறுப்பேற்க, தமிழகத்தில் இருந்து 39 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும்." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications