அரக்கோணம்: 3 முறை வென்ற திமுக ஜெகத்ரட்சன்.. பலத்தை காட்டும் பாமக- அனல் பறக்கும் களம்!
அரக்கோணம்: தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்று அரக்கோணம். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் பாமக சுமார் 3 லட்சம் வாக்குகளை உறுதி செய்து வைத்திருக்கும் அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் கடும் போட்டியை எதிர்கொள்வார் என்கின்றன களத் தகவல்கள்.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: அரக்கோணம் (தனி), சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி மற்றும் திருத்தணி. அரக்கோணம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 6 முறை, திமுக 3 முறை, அதிமுக 2 முறை, பாமக ஒரு முறை வென்றுள்ளன. இத்தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அதிகபட்சமாக 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 2004-ல் வென்ற பாமகவின் வேலுவும் மத்திய அமைச்சராக பணிபுரிந்தவர்.

அரக்கோணம் மொத்த வாக்காளர்கள்: 15,53,989; ஆண்கள்- 7,56,194; பெண்கள்- 7,97,632; 3-வது பாலினத்தவர் 163.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஜெகத்ரட்சகன்(திமுக) 4,15,041
வேலு (பாமக) 3,05,245
சங்கர்(தேமுதிக) 82,038
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஹரி (அதிமுக) 4,93,534
என். ஆர். இளங்கோ(திமுக) 2,52,768
வேலு(பா.ம.க) 2,33,762
நாசே ராஜேஷ்(காங்கிரஸ்) 43,960
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஜெகத்ரட்சகன் (திமுக) - 6,72,190
ஏகே மூர்த்தி (பாமக)- 3,43,234
பார்த்திபன் (அமமுக)- 66,826
பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி) 29,347
ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 23,771
2024-ம் ஆண்டு களம் காணும் வேட்பாளர்கள்
ஜெகத்ரட்சகன் (திமுக)
ஏஎல் விஜயன் (அதிமுக)
கே.பாலு (பாமக)
அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி)
அரக்கோணம் தொகுதியைப் பற்றி.. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகளைக் கொண்டது அரக்கோணம் லோக்சபா தொகுதி. பாலாறு பாசனத்தை மட்டுமே நம்பிய விவசாயமே இங்கு பிரதானம். ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைகள் மிக முக்கியம். வேலைவாய்ப்புகளுக்காக சென்னை நோக்கி படையெடுக்கும் தொழிலாளர்களே அதிகம். இத்தொகுதியில் தலித்துகள் அதிகமான வாக்காளர்கள். அடுத்ததாக முதலியார், வன்னியர், நாயுடு ஜாதியினர் கணிசமான வாக்காளர்கள். இத்தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அரக்கோணம் எஃகு தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும்; கைத்தறிப் பூங்காவை உருவாக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கை.
அரக்கோணம் கள நிலவரம்: 1999, 2009, 2019 ஆகிய 3 தேர்தல்களில் வென்ற ஜெகத்ரட்சகன் இம்முறையும் திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
இத்தொகுதியில் பாமகவுக்கு சுமார் 3 லட்சம் வாக்குகள் உறுதியாக கிடைக்கும் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிமுகவும் ஒரு முறை இத்தொகுதியை வென்றிருந்தாலும் வெற்றிக் கோப்பையை தட்டிப் பறிக்குமா? என்பது இங்கு கேள்விக்குறிதான். திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பு திமுக கூட்டணி கட்சிகளிடம் ஒட்டுமொத்தமாக தெரிவதை பார்க்க முடிகிறது. ஜெகத்ரட்சகனுக்கு இம்முறை பாமக கடும் போட்டியைத் தரும் என்கின்றன களத் தகவல்கள்.












Click it and Unblock the Notifications