சிபிஐயிலிருந்து அர்ச்சனா ராமசுந்தரம் மாற்றம்: தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குனரானார்
சென்னை: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், சி.பி.ஐ யில் இருந்து மாற்றப்பட்டு, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசுப் பணியில் இருந்த அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு சிபிஐயின் கூடுதல் இயக்குநர் பதவி அளிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில், அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1980ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர்.
பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார். குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். பொருளாதார குற்றப் பிரிவு இணை இயக்குநராக பொறுப்பு வகித்த முதல் பெண் போலீஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர் அர்ச்சனா ராமசுந்தரம்.
கடந்த ஆண்டு அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ., அமைப்பின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற சில மணிநேரங்களிலேயே தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனத்தை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பணியில் இருந்து விடுவிக்கப்படாத நிலையில் அவரை நியமனம் செய்தது தவறு என தமிழக அரசு கூறியது. அதே நேரத்தில் நியமனம் தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பே தகவல் அளிக்கப்பட்டது என அர்ச்சனா தரப்பில் பதில் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ தவிர வேறு ஒரு துறையிலும் அர்ச்சனாவை நியமிக்க அனுமதி இல்லை. அர்ச்சனா தற்போது தமிழக அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ளார். தமிழக அரசின் பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து அர்ச்சனா மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உள்துறை முடிவு எடுக்காவிடில் அர்ச்சனா ராமசுந்தரம் கோர்ட்டை நாடலாம் என தெரிவித்தனர். இந்த நிலையில், அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அர்ச்சனாவின் கணவர் ராமசுந்தரம் முன்னாள் பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆவார். இவரது பதவிக்காலத்தின்போதுதான் சென்னையில் திமுக ஆட்சி சார்பில் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அது கட்டி முடிக்கப்பட்ட நிலையில் விருப்ப ஓய்வில் ராமசுந்தரம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications