நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு... முன்வைத்த வாதங்கள் என்ன?
தகுதி நீக்க வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் தொகுப்பு.
Recommended Video

சென்னை: 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையின் போது எடியூரப்பா வழக்கின் தீர்ப்பு பொருந்தும்; கட்சித் தாவல் தடை சட்டம் பொருந்தாது என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்ததே கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதாகவே அர்த்தம் என்பது அரசு தரப்பு வாதம். அத்துடன் 18 பேரும் விளக்கம் அளிக்க கால அவகாசம் அளிக்கப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது; உட்கட்சி பிரச்சனையை கட்சிக்குள்தான் பேச வேண்டுமே தவிர ஆளுநரிடம் அல்ல என அரசு தரப்பு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் வலியுறுத்தியது.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க வேண்டும் என்பது தினகரனின் திட்டம். அந்த சதித் திட்டத்துக்கு 18 எம்.எல்.ஏக்களும் உடந்தையாக இருந்தனர். இதனால்தான் 18 எம்.எல்.ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் அரசு தரப்பு முன்வைத்த வாதம்.
ஆனால் முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தது எப்படி கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் வரும்? கர்நாடகாவில் இதேபோல் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படி கோரிக்கை வைத்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை உச்சநீதிமன்றம் செல்லாது என அறிவித்து கண்டித்திருக்கிறது. அது அப்படியே எங்களுக்கும் பொருந்தும் என்பதாக இருந்தது 18 எம்.எல்.ஏக்களின் வாதம்.
அத்துடன் கொறடா உத்தரவு என்பது சட்டசபைக்குள்ளான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆளுநரிடம் மனு கொடுப்பதற்கெல்லாம் பொருந்தாது. அப்போது எந்த கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆகையால் கொறடாவின் பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்பதும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதமாக இருந்தது.
சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்தான் உண்மையில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்களே தகுதி நீக்கம் செய்யப்படாத போது தங்களை தகுதி நீக்கம் செய்தது தவறு என்பதும் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு முன்வைத்த வாதம்.
தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை மட்டுமே விலக்கிக் கொண்டே தவிர ஆட்சிக்கான ஆதரவை அல்ல; எடப்பாடியை தவிர அதிமுகவில் வேறு யாரையும் முதல்வராக்க தாங்கள் ஆதரவு தர தயார் என்றும்தான் ஆளுநரிடம் தெரிவித்திருந்தோம் என வாதிட்டனர் தகுதி நீக்கத்துக்கு உள்ளான 18 எம்.எல்.ஏக்கள்.
இந்த வாதங்களின் அடிப்படையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தீர்ப்பளித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தமது தீர்ப்பில், தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும் நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்தது செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர். தற்போது 3-வது நீதிபதியின் தீர்ப்பை கேட்க இரு நீதிபதிகளும் விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications