எப்போதாவது பயன்படுத்த வேண்டிய 110 விதியை 115 தடவை பயன்படுத்திய ஜெயலலிதா: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதாவது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய அவை விதி எண் 110-ஐ மூன்றாண்டுகளில் 115 முறை பயன்படுத்தியிருப்பதும், இது ஒரு சாதனை என்று சட்டப் பேரவைத் தலைவர் பாராட்டுவதும் அவை மரபுகள் மற்றும் விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயலாகும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Article 110: Ramadoss slams Jaya

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடைபெற்று, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இந்த துறைகள் தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் வீரமணி, மொத்தம் 18 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெறும் 5.57 கோடி ரூபாய் மட்டுமே. தமிழக நிதிநிலை அறிக்கையிலேயே மிக அதிகமாக ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக உள்ள ஒருவர் வெறும் ஐந்தரை கோடி ரூபாய் அளவுக்கான திட்டங்களை மட்டுமே அறிவித்திருக்கிறார். அதேபோல், முதல்வரின் நம்பிக்கைக்குரிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்த திட்டங்களின் மதிப்பு ரூ. 12.08 கோடி மட்டும் தான். வட்டாட்சியர்களே ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் நிலையில், அதைவிட குறைவான மதிப்புள்ள திட்டங்களை அறிவிக்கும் வாய்ப்பு தான் மாண்புமிகு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், மானியக் கோரிக்கை மீதான பதிலுரையிலோ 3459 ஆசிரியர்கள் மட்டும் தான் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 17 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 17 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், 6 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவது குறித்து அமைச்சரின் பதிலுரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் கல்வி அமைச்சர் வெளியிடவில்லை.

அதேபோல், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 3,000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றி உயர்கல்வித்துறை அமைச்சரின் பதிலுரையில் எந்த அறிவிப்பும் இல்லை. இதுபற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் விசாரித்தால், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தனர். கல்வித்துறைக்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான் என்றாலும், அவை மரபுகள் காற்றில் பறக்க விடப்படுவது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக அரசில் 54 துறைகள் உள்ளன. அவற்றுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் விவாதம் நடத்தப்படும் போது, அத்துறைகள் சார்ந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வெளியிடுவது தான் மரபு ஆகும். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பெயருக்கு சில அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுவதும், முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிடுவதும் எழுதப்படாத சட்டமாகி விட்டது. தமிழக சட்டப்பேரவை விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும்.

ஆனால், 2011 ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா நேற்று முன்நாள் வரை மொத்தம் 115 முறை இந்த விதியை பயன்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் பல தருணங்களில் ஒரே நாளில் 5 முறை 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். நடப்புக் கூட்டத்தொடரில் கூட கடந்த 10ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், ஐந்து நாட்கள் கழித்து 15 ஆம் தேதி அத்துறை தொடர்பான 8 முக்கிய திட்டங்களை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார். செய்தி விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் 10 ஆம் தேதி முடிந்த நிலையில், அத்துறை குறித்த இரு முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் கடந்த 14 ஆம் தேதி முதல்வர் வெளியிட்டார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில் வேட்டி கட்டி செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக பேரவையில் கடந்த திங்கட்கிழமை விவாதம் நடைபெற்றது. அதற்கு அன்றே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்திருக்க முடியும். ஆனால், அமைச்சரை பதிலளிக்க அனுமதிக்காமல், அந்த பிரச்சினை குறித்தும் நேற்று முன்நாள் முதல்வரே 110 விதியின் கீழ் பதிலளித்துள்ளார். 110 விதியை பயன்படுத்துவது முதல்வரின் உரிமை என்ற போதிலும், எப்போதாவது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய அந்த விதியை மூன்றாண்டுகளில் 115 முறை பயன்படுத்தியிருப்பதும், இது ஒரு சாதனை என்று சட்டப் பேரவைத் தலைவர் பாராட்டுவதும் அவை மரபுகள் மற்றும் விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.

அதிமுகவின் அனைத்தும் ஜெயலலிதா தான் என்றால் அதை உட்கட்சி விவகாரம் என்று ஒதுக்கித் தள்ளி விடலாம். ஆனால், ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகள் அவையில் அனைத்துமே முதல்வர் தான்; அமைச்சர்கள் அனைவரும் பொம்மைகள் என்பது போல நடந்து கொள்வதும், குறைகளை சுட்டிக்காட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினரை ஓடுகாலிகள் என்று அமைச்சர்கள் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அவையிலிருந்து வெளியேற்றுவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்களை நடத்திய பெருமை கொண்டது. அதை துதி பாடும் மன்றமாக மாற்றி விடாமல், பெருமையையும், மதிப்பையும் பாதுகாக்கும் வகையிலும், அவையின் விதிகள் மற்றும் மரபுகளை மதித்தும் செயல்பட தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+