”உனக்கு 14 எனக்கு 32”- சிறுமியை கட்டாய மணம் புரிந்த ஆட்டோ டிரைவரும், நண்பரும் கைது
சேலம்: சேலம் மாவட்டத்தில் 14 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் திருமணத்திற்கு உதவிய நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவருக்கு சேலம் பொன்னம்மாபேட்டை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் பெண் காய்கறி வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மோகன் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் மகளான 5 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த 14 வயது சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஆட்டோ டிரைவர் மோகன் கேட்டுள்ளார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு யாருக்கும் தெரியாமல் தனது மகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் சேலம் அருகில் உள்ள அதிகாரப்பட்டிக்கு சென்றார்.
பிறகு அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் மணக்கோலத்தில் ஆட்டோ டிரைவர் மோகனும், அவரது நண்பரும் இருந்துள்ளனர். இதையடுத்து கோவிலில் வைத்து மோகனுக்கும் 14 வயதான அந்த சிறுமிக்கும் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் குறித்து இரு வீட்டாரின் தரப்பில் உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. சிறுமிக்கு திருமணம் நடப்பதை யாரும் அறிந்து திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டால் என்ன செய்வது என எண்ணி அந்த பெண் யாரிடமும் திருமணம் பற்றி தெரிவிக்கவில்லை. பின்னர் மோகன் சிறுமியை அழைத்துக்கொண்டு பெரிய வீராணம் பகுதிக்கு வந்து குடியேறினார்.
இது ஒருபுறம் இருக்க சிறுமியை மோகன் திருமணம் செய்து வந்ததை அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர்கள் இதுபற்றி சேலம் அன்பு இல்லத்தில் உள்ள நிர்வாகிகளிடம் சென்று குழந்தை திருமணம் நடந்துள்ளது என்றும் அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து அன்பு இல்ல ஒருங்கிணைப்பாளர் நிர்மலாதேவி மற்றும் நிர்வாகிகள் சிறுமியின் திருமணம் குறித்து விசாரித்தனர். அப்போது சிறுமியின் சம்மதம் இல்லாமல் அவருக்கு 18 வயது ஆகாமலேயே கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவர் இதுபற்றி விசாரிக்க அம்மாபேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை திருமணம் நடந்துள்ளது உறுதியானதையடுத்து 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக ஆட்டோ டிரைவர் மோகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரான மற்றொரு மோகன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். இதை அறிந்த சிறுமியின் தாயார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications