டிரைவரை நடுவீதியில் கொடூரமாக தாக்கிய போலீஸை கைது செய்ய கோரி செங்கத்தில் ஆட்டோ ஸ்டிரைக்!
திருவண்ணாமலை: குடும்ப பிரச்சனைக்காக ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை நடுவீதியில் மிகக் கொடூரமாக தாக்கிய 3 போலீசாரையும் கைது செய்ய வலியுறுத்தி செங்கத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தோக்கவாடியைச் சேர்ந்தவர் ராஜா, ஆட்டோ ஓட்டுநர். இவர், இவரது மனைவி உஷா, மகன் சூரியா ஆகிய 3 பேரும் தங்களது வீட்டில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்காக செங்கத்தில் உள்ள நகைக்கடைக்கு நகை வாங்கச் சென்றுள்ளனர்.

அப்போது நகை வாங்குவதற்கு பணம் குறைவாக இருந்ததால் தம்பதி இருவரும் நகைக்கடை முன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செங்கம் போலீஸார் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் தம்பதியிடம் எதற்காக சண்டை என? விவரம் கேட்டுள்ளனர்.
இது எங்கள் குடும்பப் பிரச்னை, இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என போலீஸாரிடம் ராஜா கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், ராஜா, உஷா மற்றும் சூரியா ஆகியோரை லத்தியால் சரமாரியாகத் தாக்கினர். இது தொடர்பான வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி செங்கத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் செங்கம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications