அறிவியலை எளிமையாக கற்க காரைக்குடி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
காரைக்குடி பள்ளியில் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட ஒளி-ஒலி காட்சி அறிவியல் கற்பிக்கும் முறை தொடக்க விழா நடைபெற்றது.
காரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஒளி ஒலிக் காட்சியில் அறிவியல் பாடம் கற்பிக்கும் முறையின் தொடக்க விழா நடைபெற்றது.
அமெரிக்காவில் உள்ள அனன்பெர்க் அறக்கட்டளை, கலிபோர்னியா பல்கலைகழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை
எளிமையாக கற்பிக்கும் நோக்கில் 26 மணி நேரம் வகுப்பறையில் பயன்படுத்தக்கூடிய ஒளி-ஒலி காட்சியை வடிவமைத்து குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளது.

தமிழில் அறிவியல்
இதனை தமிழ் வடிவில் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, தமிழாக்கம் செய்து பள்ளியில் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது. அச்சிறந்த படைப்பை அமெரிக்கா வாழ் இந்தியரும், உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநருமான அழகப்பா ராம் மோகன் காப்புரிமை பெற்று அப்படைப்பு முழுவதையும் தமிழாக்கம் செய்துள்ளார்.

காரைக்குடி பள்ளி
இப்படைப்புகளை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயன்படுத்த உலகத்தமிழ் மொழி அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது.
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தின் துவக்க விழா 23.03.2017 அன்று நடைபெற்றது.

அறிவியல் படைப்பு
இவ்விழாவிற்கு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளைத் தலைவர் அழகப்பா ராம் மோகன் தலைமையேற்றார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
அழகப்பா ராம்மோகன் இந்த அறிவியல் படைப்பு பற்றி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார் அவர்கள் மேலும் கூறும் போதும் இந்த அறிவியல் படைப்பானது மாணவர்களின் அறிவியல்
அறிவை தூண்டும் வகையில் புத்தக வடிவிலும், மேலும் அதை எளிமையாக கற்க ஒளி - ஒலி காட்சியாக குறுந்தகடு வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிடிக்களில் கற்பிக்கும் முறை
வாரம் அரைமணி நேரம் பார்க்கும் வகையில் 52 பாகங்கள் உள்ள 13 குறுந்தகடுகளில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த அறிவியல் படைப்பின் தொகுப்பினை
ஒளி-ஒலி காட்சி மூலம் விளக்கி கூறினார். இத்தொகுப்பினை அழகப்பா ராம் மோகன் பள்ளிக்கு வழங்க தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதனை பெற்று கொண்டனர். விழா முடிவில் பட்டதாரி ஆசிரியர் மு. கோமதி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியை எஸ்.மீனாட்சி செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications