அழகிரியை மீண்டும் சேர்க்க வேண்டும்.. கடமலைக்குண்டு பண்ணையில் ஒலித்த குரல்!
தேனி: திமுகவில் மீண்டும் மு.க.அழகிரியை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை தென் மாவட்ட திமுகவில் மீண்டும் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு -மயிலாடும்பாறை ஒன்றிய திமுக இளைஞர் அணி மற்றும் வார்டு செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்தான் இதுகுறித்து தீர்மானம் போடப்பட்டது.
இன்று காலை நடந்த இந்தக் கூட்டத்திற்கு, முன்னாள் ஒன்றிய செயலாளர் இளம்வழுதி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உள்பட நூற்றுணக்கானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் அழகிரி தொடர்பாக முக்கியத் தீர்மானம் போட்டனர்.

மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும். தென் மண்டல அமைப்புச் செயலாளராக அவரை கழகத் தலைமை நியமிக்க வேண்டும். தென் மண்டலங்களில் உள்ள தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற வேண்டும் என்றால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது அவசியம் என்று தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது
மேலும், தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா கட்சிக்காரர்களை மதிக்காமல் தனிச்சையாக செயல்படுகிறார். ஆகையால் அவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, புதிய பொறுப்பாளரை கழகத் தலைவர் அறிவிக்கவேண்டும். அப்படி அறிவிக்க தவறினால், மு.க.அழகிரி என்ன சொல்கிறாரே அதன் வழியில் செல்வோம் என்றும் எச்சரிக்கைத் தீர்மானம் ஒன்றும் போடப்பட்டது.
இந்தக் கூட்டம் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களில் மு.க.அழகிரி விதம் விதமான தோரணையுடன் நீக்கமற நிறைந்திருந்தையும் காண முடிந்தது.


Click it and Unblock the Notifications
