தாம்பரம் அருகே குப்பைத்தொட்டியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு
தாம்பரம் அருகே பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை: தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் உயிருடன் மீட்டனர்.
இரும்புலியூர் மேம்பாலம் அருகே மதுரவாயல் செல்லும் பைபாஸ் சாலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அவ்வழியாக சென்றவர்கள் அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் பார்த்தபோது, பிறந்த 2 நாட்களான ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, குழந்தையை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, குழந்தையை வீசியது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றார்கள்.












Click it and Unblock the Notifications