வங்கியில் ரூ.274 கோடி மோசடி- தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உட்பட 8 பேர் வீடுகளின் அதிரடி சோதனை
சென்னை: சென்னையில் வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பிரபல தொழிலதிபர் மற்றும் பி.சி.சி.ஐயின் முன்னாள் தலைவரான ஏ.சி.முத்தையா உட்பட 8 பேர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களது வீடுகளில் சி.பி.ஐ போலீசார் நேற்று அதிரடி சோதனை வேட்டை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையில் செயல்படும் பஸ்ட் லீசிங் இந்தியா என்னும் தனியார் கம்பெனியின் சேர்மன், மேலாண்மை இயக்குனர், சீனியர் துணை தலைவர் மற்றும் தலைமை பைனான்ஸ் அதிகாரி மற்றும் சிலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

அவர்கள் மீது சதித்திட்டம், மோசடி உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் ஐ.டி.பி.ஐ வங்கிக்கு ரூபாய் 274 கோடி இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2013 ஆம் ஆண்டு வரை இந்த பண இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.டி.பி.ஐ வங்கி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெங்களூரில் இருந்து வந்த சி.பி.ஐ. போலீஸ் அதிகாரிகள் சென்னையில் 7 இடங்களிலும், ஹைதராபாத்தில் ஒரு இடத்திலும் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை வேட்டை நடத்தினார்கள்.
புகார் கூறப்பட்ட சென்னை நிறுவனத்தில் புகார் எழுந்த காலகட்டத்தில் சேர்மனாக தொழில் அதிபர் ஏ.சி.முத்தையாவும், மேலாண்மை இயக்குனராக பரூக்இரானி என்பவரும், சீனியர் துணை தலைவராக டில்லிராஜூவும், தலைமை பைனான்ஸ் அதிகாரியாக சிவராமகிருஷ்ணா என்பவரும் செயல்பட்டுள்ளனர் என்றும் எனவே அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் சி.பி.ஐ தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications