ஈரோடு மக்களின் ஹாட் அண்ட் ஸ்வீட் நியூஸ் இப்போ என்ன தெரியுமா?
பவானிசாகர் அணை மட்டம் 102 அடியாகவே நீடித்து காணப்படுகிறது.
ஈரோடு: வாய்க்கால், வரப்புகளுக்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வந்து கொண்டிருப்பதை பார்த்து ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஏகப்பட்ட சந்தோஷத்தில் உள்ளனர்.
எங்கே தங்களது தாய்போல பாவிக்கும் நிலங்கள் எல்லாம் காய்ந்து சருகாகிவிடுமோ பயந்துகிடந்தவர்கள், இன்று பொங்கி வரும் நீரை கண்டு புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

102 அடி நீர்மட்டம்
அதற்கு காரணம் பவானிசாகர் அணைதான். தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை... ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான்.. ஈரோடு மாவட்ட மக்களுக்கு அரணாக நின்று உதவி கொண்டிருப்பதும் இந்த அணைதான். இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 120 அடியாகும். ஆனால் இதற்கு இப்போது என்ன சிறப்பு வந்துவிட்டது என்கிறீர்களா?

ஹாட் அண்ட் ஸ்வீட்
இந்த அணையில் சமீபத்தில் பெய்த மழையால் 5 ஆண்டுகள் கழித்து முழு கொள்ளவை எட்டியது. ஆனால் மழை குறைந்தாலும், அணைக்கு வரும் நீர்குறைந்து போனாலும் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. கடந்த10 நாட்களுக்கு முன்பு 102 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போதும், 102 அடியாகவே உள்ளது. இதுதான் இப்போதைய மாவட்ட மக்களின் ஹாட் அண்ட் ஸ்வீட் நியூஸ்.

விவசாயிகள் மகிழ்ச்சி
10 நாட்களாக 102 அடியாகவே நீர்மட்டம் இருப்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை அணைக்கு வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு நீரும் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும், குடிநீருக்காக பவானி ஆற்றிலும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

பசுமையில் ஈரோடு
அணை ஈரோடு மாவட்டத்தை சார்ந்ததாக இருந்தாலும், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதனால் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையுடன் விவசாய தேவையும் பூர்த்தியாகிறது. தண்ணீரை கண்டதும் தங்கள் விவசாய பணிகளிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தை எப்போதுமே பசுமையாக வைத்திருக்கும் பவானிசாகர் இன்னமும் தன் கடமையை தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications