அவருக்கும் குடும்பம் இருக்கு.. கலாஷேத்ரா ஆசிரியருக்கு அஜித் பட நடிகை பிக்பாஸ் அபிராமி “சப்போர்ட்”
சென்னை: கலாஷேத்ரா குறித்து ஒரு தரப்பு செய்திகள் மட்டுமே பகிரப்படுவது நியாமில்லை என்றும், அதன் இயக்குநர் ரேவதிக்கு தான் துணை நிற்பதாகவும் நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்து உள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் இதுகுறித்து யாருமே கருத்து கேட்கவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்றார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இவரிடம் கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நடிகை அபிராமி பேட்டி
இதற்கு பதிலளித்த அவர், "நான் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. எனக்கு இது பற்றி பேசுவதில் விருப்பம் இல்லை. ஏனென்றால், எப்போதும் ஒரு தரப்பு செய்திகளை மட்டும் கேட்கக்கூடாது. நிறைய பேர் ஒரு தரப்பு செய்திகளை கேட்டுக்கொண்டு நிறைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். 89 ஆண்டுகளாக நாங்கள் படித்த கல்லூரியில் இப்படி ஒரு புகார் சொல்லும் அளவுக்கு எதுவுமே நடக்கவில்லை.

யார் யாரோ கருத்து சொல்றாங்க
இப்போது வந்து யார் யாரெல்லாமோ கருத்து சொல்கிறார்கள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் கலாஷேத்ராவில் படிக்காதவர்கள் கூட கலாஷேத்ராவை பற்றி விசாரிக்கிறார்கள். கலாஷேத்ரா என்ற ஒரு பெயரை கூட சரியாக உச்சரிக்கக்கூட தெரியாதவர்கள் நிறைய பேர் அதுபற்றி தவறாக சொல்கிறார்கள்.

ஒரு தரப்பு தகவல்
எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. கலாஷேத்ரா மாணவியாக நான் சொல்வது என்னவென்றால், கலாஷேத்ரா குறித்து அவதூறு பரப்பும் வேலை தற்போது நடந்து வருகிறது. என்ன நடக்கிறது என்று எங்களுக்கே புரியவில்லை. இதற்கு காரணம், ஒரு தரப்பு தகவல்களை கேட்டு எப்படி உறுதியாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ரேவதிக்கு ஆதரவு
நான் ரேவதிக்கு ஆதரவாக நிற்கிறேன். காரணம் அவர்கள் தற்போதுதான் இயக்குநர் ஆனார். இந்த பிரச்சனை 10 ஆண்டுகளாக நடப்பதாக சொல்கிறார்கள். அப்போது ரேவதி அவர்கள் இயக்குநராக இல்லை. ஆனால், அனைவரும் ரேவதியை குற்றம்சாட்டுகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. இதுபோல் நிறைய கேள்விகள் உள்ளன.

ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு
அந்த ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பே வழங்கவில்லை. அவரது வாயை திறந்து என்ன நடந்தது என்று பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கும் ஒரு குடும்பம் உள்ளது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி இருக்கிறார். அவர்கள் யாரை பற்றியும் யாருமே நினைக்கவில்லை. நாங்கள் மிகவும் பெருமையாக நினைத்த ஆசிரியர்களை மிக மோசமாக இழிவுபடுத்தி பேசி உள்ளார்கள்.

குடியரசுத் தலைவர் வந்தார்
உற்சவத்துக்கும், நல்ல நிகழ்ச்சிகளுக்காகவும் போய்கொண்டு இருந்த கல்லூரி. நல்ல விசயத்துக்காக செய்தியாளர்களும், போலீசும் சென்றால் சரி. ஒரு முறை குடியரசுத் தலைவர் இங்கு வந்திருந்தது நன்றாக இருந்தது. இது நியாயமான விசயமாக இல்லை. எத்தகைய துன்புறுத்தலாக இருந்தாலும் நடந்த நேரத்தில் வெளிப்படையாக நாம் பேச வேண்டும்.

உண்மையை தைரியமாக பேச வேண்டும்
ஒரு தவறு நடந்தால் அந்த இடத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை விடுத்து பயந்துவிட்டேன், எங்கே போய் சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லக்கூடாது. இது 1980 கள் கிடையாது. அதேபோல் சொல்லும் விசயம் உண்மையாகவும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். உண்மையாக இருந்தால் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.












Click it and Unblock the Notifications