படிப்பு வரல்லைனு கைத்தொழில் செய்யலாமா.. அதுக்கும் கல்வியறிவு வேணும்.. வீடியோ மூலம் தரமான பதில
சென்னை: படிப்பு வரவில்லை என்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களா.. நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி இதுதான்.. என்று இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், படிப்பு தொடர்பாக நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா சக போட்டியாளரான நடிகை விசித்ராவிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜோவிகா பேசும் போது, உன்னால முடியல.. உனக்கு அந்த அளவிற்கு தப்பான எண்ணங்கள் வருது..அந்தவிஷயத்தை பண்ணும் போது அவ்வளவு மோசமாக போகுது அப்படீன்னா பண்ணாதே.. படிச்சுத்தான் வாழனும்னு எதுவுமே கிடையாது" என்று ஆவேசமாக கத்தினார். ஜோவிகாவின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் என விவாதங்கள் எழுந்தன.

அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய மொழி, பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தனக்கே உரிய பாணியில் பேசினார். அதில் கமல்ஹாசன் பேசுகையில் , "படிப்பு வரவில்லையென்றால் விட்டுடனும், உயிரைக் கொடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் நானும் படித்தவன் கிடையாது. ஆனால் எனது வட்டத்தை படித்தவர்களோடு உருவாக்கிக் கொண்டேன். கல்வி தான் கலங்கரை விளக்கம். ஆனால் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியாமல் கலங்கரை விளக்கத்தை நோக்கி போன்னா...? அவ்வை சொன்ன மாதிரி கல்லாதது உலகளவு... கைமண் அளவை வைத்துக்கொண்டு இது தான் கல்வி இதிலிருந்து தான் நீ கட்டடம் எழுப்பவேண்டும் என்றால் நடக்க வாய்ப்பு இல்லை..
ஆனால் விசித்திராவின் அபிப்ராயம் தப்பு என்று நான் சொல்ல மாட்டேன்.. படிப்பை வைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் படித்துத் தான் தீரவேண்டும். விசித்திராவிற்கு படிப்பின் மேல் நம்பிக்கை இருந்ததால் தான் இந்த வயதில் phd முடித்து இருக்கிறார்கள். இது இவர்களின் சிஸ்டம். என்னை நிறையப் பேர் படிக்காதவன் என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். அவர்களே இப்பொழுது 'என்ன சார் நீங்க... இவ்வளவு படிக்கிறீர்களே என்பார்கள். விட்டதை பிடிக்கிறேன் அவ்வளவு தான். அதே போல அதை எப்ப பிடிக்கவேண்டும் என்பதை ஜோவிகா முடிவு செய்யட்டும். கற்றலில் விதி இருக்கலாமே தவிர, கற்றலில் வதை இருக்கக்கூடாது" என்று கமல்ஹாசன் பேசினார்.
கமலின் இந்தபேச்சு சரியாக புரியாததால், பலர் கமல்ஹாசன் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்யவில்லை என்று கொந்தளிக்க ஆரம்பித்தனர். படிப்பு முக்கியம் என்று ஒற்றை வார்த்தையில் கமல் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் வந்ததால், பலரும் சமூக வலைதளங்களில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
அதேபோல் படித்ததால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி முன்னேறினார்கள் என்கிற கதையை ஒவ்வொருவராக பதிவிட தொடங்கினார்கள். கடந்த இரண்டு நாட்களாக படிப்பு தான் முக்கியம் என்பதை உணர்த்தும் பல்வேறு பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
கூலி வேலைக்கு சென்ற பெற்றோர்களின் பிள்ளைகள் இன்றுஉயர்ந்த நிலையில் இருக்க காரணம் படிப்பு தான் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொருவரின் பதிவும் இருந்து வருகிறது. கல்விக்காக பட்ட கஷ்டம்,கல்வி கற்ற பின்னர் மாறிய வாழ்க்கை குறித்த பதிவுகள் தான் நேற்று சமூக வலைதளங்கள் முழுவதுமே காணப்படுகிறது.
இதனிடையே படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அதில் கற்களை எண்ணக்கூட தெரியாத மக்கள், ஏமாறும் காட்சிகள் இருக்கும். அந்த காட்சியை குறிப்பிட்ட நெட்டிசன்கள், படிப்பு வரவில்லையென்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களா..
நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி இதுதான் என்று தெரிவித்துள்ளனர் . அந்த வீடியோவை பார்த்த பலரும் வாகைசூடவா படத்தை எல்லாருமே மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்தப் படம் இன்னும் நிறைய மனிதர்களை சென்றடையவில்லை என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது.இந்த படம் மட்டும் பலருக்கும் சென்றிருந்தால்,கண்டிப்பாக கல்வி கற்காமல் குழந்தைகள் கஷ்டப்படுவது குறைந்துவிடும்.
கல்வி கற்க முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி கொடுமை அனுபவிக்கும் உலகில் உள்ள அத்தனை ஏழை குழந்தைகளுக்கும் சமர்ப்பணமாக வெளியான வாகை சூடாவா படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications