மோடி வருகைக்கு முன்பாகவே நிவாரணம் தந்த ஹைகோர்ட் தீர்ப்பு.. பெரும் நிம்மதியில் பாஜக
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையில் இடம் கொடுத்து உத்தரவளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது பாஜக மற்றும் திமுக இரு தரப்புக்குமே பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
அண்ணாவுக்கு அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது திமுகவின் எண்ணம். அதை முறைப்படி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தெரிவித்த போதும் கூட தமிழக அரசு அதை நிராகரித்து விட்டது. இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இந்தியாவின் மாபெரும் தலைவரை அதிமுக அரசு அவமதித்து விட்டதாகவே அத்தனை பேரும் வேதனைப்பட்டனர், ஆதங்கம் தெரிவித்தனர். ஆனால் திமுக விடவில்லை. தனக்கே உரிய பாணியில் சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்தது. எத்தனையோ போராட்டங்களை சட்டரீதியாகவே சந்தித்து வென்றவர் கருணாநிதி. கடைசியில் அவருக்காக திமுக போராடும் நிலை ஏற்பட்டதை திமுகவினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனாலும் அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திமுக வழக்கறிஞர்கள் குழு தங்களது வாதத்தை அட்டகாசமாக எடுத்து வைத்து ஹைகோர்ட்டில் வாதிட்டது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு வழக்கறிஞரால் பதிலளிக்கவே முடியாத நிலை. கடைசியில் நீதிபதிகளும் கூட தமிழக அரசின் வாதத்தால் பெரும் அதிருப்தி அடைந்தனர். எந்த காரணமும் இல்லாமல் தமிழக அரசு இந்த தடையை போட்டிருப்பாக அவர்கள் முடிவுக்கு வந்தனர்.
இறுதியில் திமுகவின் நியாயம் வென்றது, கலைஞரும் தனது கடைசிப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த சர்ச்சையால் திமுக மட்டுமல்லாமல் பாஜகவும் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளானது. காரணம், இன்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வருகை தந்தார். அவர் வரும் சமயத்தில் இப்படி ஒரு சிக்கல் வந்து விட்டதே என்பதே பாஜகவினரின் தர்மசங்கடத்துக்கு காரணம்.
காரணம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பொய் சொல்கிறார். அவர்தான் வேண்டும் என்றே தடை போட்டுள்ளார் என்று நேற்று வழக்கறிஞர் துரைசாமி பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார். இதனால் தேவையில்லாமல் பாஜகவின் பெயர் கெட்டுப் போய் விடுமோ என்ற அச்சம் பாஜக தரப்பில் இருந்தது.
ஆனால் நல்ல வேளையாக பிரதமர் வருகைக்கு முன்பாகவே ஹைகோர்ட் நல்ல தீர்ப்பை சொல்லி விட்டது. இதனால் பாஜகவுக்கும் தர்மசங்கடம் நீங்கியது. திமுகவும் இறுக்கம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியுள்ளது.
மாண்டாலும் வென்றது கலைஞர்தான்.. எளிதில் வெல்ல முடியாதவர் கருணாநிதி என்பதையே இந்த தீர்ப்பு மீண்டும் ஒரு முறை உரத்துக் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications