சர்ச் மேட்டர்.. திமுக அழுத்தத்தால் மக்கள் மீது போலீசார் அராஜக நடவடிக்கை.. கொதிக்கும் பாஜக நாராயணன்!
தென்காசி: தென்காசி மாவட்டம் அச்சங்குட்டத்தில், பள்ளியில் மதமாற்ற முயற்சி நடப்பதாக கிளம்பிய சர்ச்சையால் ஏராளமான மாணவர்கள் பள்ளியை விட்டு நின்ற நிலையில், பள்ளி இருந்த அரசு நிலத்தில் சர்ச் கட்ட முயற்சிப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் அச்சங்குட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த அரசு உதவிபெறும் கிறிஸ்தவ பள்ளியில் கடந்த மார்ச் மாதம் பெரிய சர்ச்சை வெடித்தது. இந்து மாணவர்களை மதமாற்றம் செய்ய பள்ளி முயற்சிப்பதாக கூறி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என டிசி வாங்கினர். இந்நிலையில், பள்ளி அமைந்துள்ள அரசு நிலத்தில் சர்ச் கட்ட முயற்சி நடப்பதாக கூறி சமீபத்தி இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குரல் எழுப்பியுள்ளார்.

நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அச்சங்குட்டம் என்ற ஊரில் திருநெல்வேலி மறைமாவட்ட அறக்கட்டளையின் (TDTA) அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி 'அரசு நிலத்தில்' நீண்ட காலமாக செயல்பட்டு வந்த நிலையில், பழைய இடத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு சில மாதங்களுக்கு முன் இடம் பெயர்ந்தது. பழைய பள்ளியை இடித்து விட்டு அந்த 'அரசு நிலத்தில்' இடத்தில் ஒரு 'சர்ச்' கட்டுவதற்கான முயற்சியில் அந்த பள்ளி நிர்வாகம் இறங்கியதை கண்டித்து அந்த ஊர் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் தற்காலிகமாக அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
மேலும், 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் இந்த பள்ளியில், தொடர்ந்து கிருஸ்துவ மத வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மத போதனைகளையும், பைபிள் படிக்க சொல்லி குழந்தைகளை வற்புறுத்தியும் வந்ததால் கொதிப்படைந்த பெற்றோர்கள் 100 பேருக்கு மேல் மதவாத நோக்கில் செயல்படும் பள்ளி நிர்வாகத்தின் போக்கை கண்டித்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். பல்வேறு கட்ட பேச்சு வார்தைகளை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் நடத்தியும், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த வருடம் குழந்தைகள் தங்களின் ஆண்டு தேர்வுகளை ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீராணம் என்கிற ஊரில் உள்ள அரசு பள்ளியில் எழுதியது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கல்வியாண்டில், ஒரு சில குழந்தைகள் வேறு பள்ளியில் சேர்ந்துள்ளதோடு, மீதமுள்ள 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த ஊரில் உள்ள படித்த, தகுதியுள்ள சில பெண்களின் உதவியோடு தினமும் தனியார் இடங்களில் கல்வி பயின்று வருவது அதிர்ச்சியளிக்கும் உண்மை. ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பள்ளிக்கு வேறு ஒரு இடத்தை தாங்களாகவே முன்வந்து கல்வித்துறைக்கு அளித்தும், அனைத்தையும் உணர்ந்துள்ள கல்வித்துறை செய்வதறியாது திகைத்து நிற்பது கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில், தொடர்ந்து பல மாதங்களாக அந்த ஊர் மக்கள், மத சார்புடன் செயல்படும் அந்த TDTA பள்ளியை எதிர்த்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், தென்காசி மாவட்ட நிர்வாகமானது இந்த விவகாரத்தில் நடுநிலையோடு நடந்து கொள்ளாமல், உண்மைக்கு, நீதிக்கு, நியாயத்திற்கு, நேர்மைக்கு எதிராக செயல்பட்டு, அந்த ஊர் மக்கள் மீது பொய் வழக்குகளை ஜோடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில், 'சர்ச் விரிவாக்கத்தை' இந்த ஊர் மக்கள் எதிர்ப்பதாக குறிப்பிட்டிருப்பது மத ரீதியாக இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்குவது மாவட்ட நிர்வாகம் தான் என்பதை உணர்த்துகிறது. சட்ட விரோதமாக கிருஸ்தவ 'சர்ச்சை' கட்டுவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சட்ட விரோத செயலை தட்டி கேட்கும் சாமான்யர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஜனநாயக விரோதம்.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அச்சங்குட்டம் என்ற ஊரில் திருநெல்வேலி மறைமாவட்ட அறக்கட்டளையின் (TDTA) அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி 'அரசு நிலத்தில்' நீண்ட காலமாக செயல்பட்டு வந்த நிலையில், பழைய இடத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு சில மாதங்களுக்கு முன் இடம் பெயர்ந்தது.…
— Narayanan Thirupathy (@narayanantbjp) October 13, 2023
இது வரை நான்கு பேரை கைது செய்துள்ளது காவல்துறை. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். நாற்பதுக்கும் மேலானோர் மீது புனையப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் தமிழக அரசு. அந்த கிராமத்து குழந்தைகளுக்கு அரசு பள்ளி ஒன்றை அமைத்து கல்வியை தர வேண்டிய அரசு இயந்திரம், அந்த மாவட்டத்தை சேர்ந்த ஆளும்கட்சியின் ஒரு சில முக்கிய புள்ளிகளின் அதிகார மையத்துக்கு தாளம் போட்டு கொண்டு கல்வியை தர மறுப்பது ஜனநாயக விரோதம். சமூக நீதி காவலர்கள் என்று பறைசாற்றிக் கொள்பவர்கள் சமூக நீதியை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கல்வியை மறுப்பது தேச துரோக செயல்.
தொடர்ந்து போராடும் அந்த கிராமத்து சாதாரண மக்களை முக்கிய திமுக தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாக காவல்துறை அச்சுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய ஹிந்து இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறை மூலம் அடக்க பார்ப்பது ஃபாஸிச தமிழக அரசின் அடக்குமுறையை வெளிப்படுத்துகிறது. நீதி நிலைநாட்டப்படும் வரை போராட்டம் தொடரும். விரைவில் போராட்டக் களத்தில் நான்.." எனத் தெரிவித்துள்ளார் நாராயணன் திருப்பதி.












Click it and Unblock the Notifications