தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்..வைகோவை தொடர்ந்து பாஜக தமிழிசையும் அறிவிப்பு!
காஞ்சிபுரம்: தமிழக சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயார் நிலையில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியது: தமிழக பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எஸ்.எம்.எஸ் அழைப்புகள் மூலம் மட்டும் இதுவரை 31 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கைக்கு காலஅவகாசம் மேலும் 1 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 13ம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் மகா தொடர்பு இயக்கம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் குறித்தும், அவர்களது பங்கு குறித்தும் பயிற்சி நடைபெற உள்ளது.

கூலித் தொழிலாளர்
இதைத் தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் மாநில, மண்டல, கிளை அளவிலான மகா தொடர்பு இயக்கம் நடைபெறும். இது வரும் 2016 தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தொண்டர்களுக்கு மிக எளிதாக இருக்கும். மக்கள் பிரச்னையை எந்த வகையிலும் தீர்க்க முடியாத ஒரு அரசுதான் இப்போது தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர வனப்பகுதியில் அப்பாவி 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போலீசுடன் ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழக அரசு காப்பாற்றியிருக்கலாம்
கடத்தல் முதலைகளை தப்பிக்க வைக்க திசை திருப்பு நாடகமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது போன்ற தாக்குகல்களுக்கு ஏற்கெனவே தமிழக கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போதே தமிழக அரசு சுதாரித்திருந்தால், இது போன்ற கொடிய தாக்குதல்களில் இருந்து அவர்களை நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும்.

விவசாய ஆதரவு மோடி
கடந்த காலங்களில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அழிவு ஏற்பட்டால், இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 சதவீதம் அழிவு ஏற்பட்டாலே இழப்பீடு வழங்கலாம் என்று மத்திய பாஜக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. எப்போதுமே மோடி விவசாயிகளின் நண்பனாக இருப்பார். இதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள, ரியல் எஸ்டேட் திட்டம், முத்திரா வங்கித் திட்டம் போன்றவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேர்தலை சந்திக்க தயார்
100 நாள் வேலைத் திட்டத்தை ஆக்கபூர்வமாக்கும் வகையில் மக்களுக்கு நல்ல பல பணிகள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அடுத்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும். இவ்வாறு சவுந்திரராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications