கொள்ளையை விசாரித்த சென்னை போலீஸுக்கு 'ஷாக்' - கள்ளக் காதலிகளுக்காக 3 'விஷ ஊசி' கொலைகளும் அம்பலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திருட்டு வழக்கு ஒன்றை போலீஸ் விசாரிக்கப் போன இடத்தில் 3 பேரை நூதன முறையில் விஷ ஊசி போட்டு கொன்ற கொலைகாரன் சிக்கியுள்ளான். கள்ளத் தொடர்புக்கு தடையாக இருந்த பெண்களின் கணவர்கள், தனது மைத்துனன் என 3 பேரை சயனைடு விஷ ஊசி போட்டு கொன்று விட்டு பிசினஸ் மேன் போர்வையில் கொலைகாரன் சுற்றித் திரிந்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் வசிப்பவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனது வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கள் மற்றும் பணம் திருடப்பட்டு விட்டதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் கடந்த 4ம் தேதி ஸ்டீபன் புகார் கொடுத்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி, 32, முருகானந்தம், 27, சதீஷ்குமார்26 ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பாலாஜி, முருகானந்தம் ஆகிய இருவரும் ஏற்கெனவே ஸ்டீபனிடம் வேலை செய்து வந்துள்ளனர். இதனால் ஸ்டீபனிடம் பணப்புழக்கம் அதிகம் இருப்பதை தெரிந்துகொண்டு அவற்றை திருடியுள்ளனர்.

திருட்டு வழக்கில் கைதான 3 பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, திருட்டு மட்டும் அல்லாமல் மேலும் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்திருக்கிறோம் என்று அவர்கள் கூறியதை கேட்ட போலீஸார் அதிர்ந்துவிட்டனர்.

மனைவியுடன் தகராறு

மனைவியுடன் தகராறு

ஸ்டீபனுக்கும், அவர் மனைவி ரேசாலின் மேரிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கின்றனர். ஸ்டீபன், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு முயற்சித்தார். ஆனால் அதற்கு ஆயிரம் விளக்கில் வசித்து வந்த ரோசலின் மேரியின் சகோதரர் ஜான் பிலோமினன் எதிர்ப்பு தெரிவித்தார்.

விஷ ஊசி போட்டு கொலை:

விஷ ஊசி போட்டு கொலை:

மனைவி பிரிவதற்கு தனது மைத்துனர் ஜான் பிலோமினன்தான் காரணம் என நினைத்து அவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டுள்ளார். அதன்படி, ஸ்டீபன் தனது ஆள்கள் மூலம் ஜான் பிலோமினனை விஷ ஊசி போட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி கொலை செய்தார்.

தப்பிய ஸ்டீபன்

தப்பிய ஸ்டீபன்

ஜான் விஷ ஊசி மூலம் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜான் நெஞ்சு வலியால் இறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆயிரம் விளக்கு போலீஸார், ஜான் இறப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். இச் சம்பவத்தில் சிக்காததால் ஸ்டீபன், அடுத்தடுத்து இருவரை ஊசி போட்டு கொலை செய்தார்.

பல பெண்களுடன் தொடர்பு

பல பெண்களுடன் தொடர்பு

ஸ்டீபன் பல பெண்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். உத்திரமேருரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதற்கு தடையாக இருந்த ஸ்ரீதரை உத்திரமேருரில் வைத்து 17-05-2015 அன்று விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
மடிப்பாக்கத்தை சேர்ந்த ஹென்றி என்பவரின் மனைவியுட னும் ஸ்டீபனுக்கு தவறான தொடர்பு இருந்துள்ளது. இதற்கு தடையாக இருந்த ஹென்றிக்கு 1-01-2015 அன்று விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.

கூலிக்கு கொலை

கூலிக்கு கொலை

ஹென்றிக்கு விஷ ஊசி போடுவதற்கு ஸ்டீபன், சதீஷ்குமாரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக சதீஷ்குமாருக்கு ரூ. 1 லட்சம் பணம் கொடுத்தாராம். ஜான், ஸ்ரீதர் ஆகியோருக்கு விஷ ஊசி போட்டு கொல்ல, தன்னிடம் வேலை செய்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, முருகானந்தம் ஆகியோரை ஸ்டீபன் பயன்படுத்தியுள்ளார்.

கொலை செய்தது எப்படி?

கொலை செய்தது எப்படி?

விஷ ஊசி போட்டு 3 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்டீபன், இதற்கான விஷத்தை மும்பையில் இருந்து ரூ.1.50 லட்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். 1 மில்லி அளவு விஷம் செலுத்தினாலேயே மனிதர்கள் இறந்துவிடுவார்களாம். ஆனால் ஸ்டீபன், ஊசியில் 5 மில்லி அளவு விஷத்தை ஏற்றி, கொலை செய்துள்ளார்.

குடை மூலம் கொலை

குடை மூலம் கொலை

தனது எதிரிகள் மீது ஊசி மூலம் விஷத்தை செலுத்துவதற்கு ஸ்டீபன் நூதனமான முறையை பயன்படுத்தியுள்ளார். இதற்காக குடையின் பின் பகுதியில் கம்பி போன்று நீண்டு கொண்டிருக்கும் பகுதியின் நுனியை வெட்டியுள்ளார். பின்னர் அந்த நுனிப் பகுதியில் விஷம் ஏற்றப்பட்ட ஊசியை வைத்துள்ளார்.

நூதன முறையில் கொலை

நூதன முறையில் கொலை

விஷ ஊசி வைத்துள்ள குடையை சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார். பின்னர், தனது ஆள்கள் மூலம் சாலையில் எதிராளிகள் சாதாரணமாக நடந்து செல்லும்போது குடையை அவர்கள் மேல் குத்துவதுபோல கொண்டு சென்று, குடையின் நுனிப் பகுதியில் வைத்திருக்கும் விஷ ஊசியை குத்தச் செய்துள்ளார்.

நெஞ்சுவலியில் மரணம்

நெஞ்சுவலியில் மரணம்

சாலையில் செல்வோருக்கு இது எதார்த்தமான நிகழ்வாக தெரிந்ததால், யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. அதேவேளையில் விஷ ஊசி போடப்பட்டவருக்கு, நெஞ்சு வலிக்கு உரிய அறிகுறிகளே ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஊசி போடப்பட்ட 3 பேரும் 5 நிமிட நேரத்தில் இறந்துள்ளனர். கிரைம் கதையில் வரும் சம்பவம் போல ஸ்கெட் போட்டு கொலை செய்துள்ளனர்.

துப்பாக்கி - தோட்டக்கள் பறிமுதல்

துப்பாக்கி - தோட்டக்கள் பறிமுதல்

3 பேரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஸ்டீபனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஸ்டீபன் அனுமதியின்றி வைத்திருந்த 2 கைத்துப்பாக்கிகளும், 5 தோட்டாக்களும், கொலை செய்ய பயன்படுத்திய விஷ ஊசி மருந்து மற்றும் சிரிஞ்ச் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

எம்.காம் பட்டதாரி

எம்.காம் பட்டதாரி

விஷ ஊசி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்டீபனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூராகும். 12ஆம் வகுப்பு படித்து முடித்த ஸ்டீபன், பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.காம். முடித்துள்ளார்.

இணையத்தில் தேடிய ஸ்டீபன்

இணையத்தில் தேடிய ஸ்டீபன்

தனது மைத்துனர் ஜான் பிலோமினனை கொலை செய்ய முடிவு செய்ததும், தான் போலீஸாரிடம் சிக்காத வகையில் நூதனமாக கொலை செய்வது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது விஷ ஊசி போட்டு கொலை செய்யும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவலின் அடிப்படையிலேயே ஸ்டீபன், தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.

சயனைட் விஷம்

சயனைட் விஷம்

இதில் விஷமாக பொட்டாசியம் சயனைட் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட விஷத்தை ஆய்வு செய்த பின்னரே, அதை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர். ரூ. 12 லட்சம் கொடுத்து இரண்டு துப்பாக்கிகளை மும்பையில் வாங்கியுள்ளார்.

கள்ளத் தொடர்பு

கள்ளத் தொடர்பு

3 கொலைகளை செய்துவிட்டு அவற்றை இயற்கை மரணம்போல மாற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஸ்டீபன் தவறான உறவு வைத்திருந்த இரு பெண்களும் அக்காள்-தங்கை ஆவர். இவர்களையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

4 பேர் எங்கே?

4 பேர் எங்கே?

இந்த சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், பி.இ.படித்துள்ளார். சதீஷ்குமாரின் கூட்டாளிகள் வியாசர்பாடியைச் சேர்ந்த திலீபன், ரமேஷ், ராஜா, புலிக்குட்டி அசோக்குமார் ஆகிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+