மத பிரசார விவகாரம்: தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர்!
சென்னை: மத பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று ஐ.ஏ.எஸ். அதிகார் உமாசங்கருக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் உமாசங்கரோ, மத பிரசாரத்தில் ஈடுபடுவது தனி மனித உரிமை. இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன் என்று கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
1991-96ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு. இந்த வழக்கில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சரும் தற்போது தி.மு.க.வில் இருக்கும் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் தமது ராஜ்யசபா எம்.பி. பதவியை இழக்க நேரிட்டது.

இந்த சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கை வெளியில் கொண்டுவந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த உமாசங்கர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவ மதத்தில் இணைந்தார். பின்னர் கிறிஸ்துவ மதபிரசாரகவும் மாறினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் மத பிரசாரத்துக்கு உமாசங்கர் சென்ற போது அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே மதப் பிரசாரம் செய்ய தடை விதிப்பது தொடர்பான உத்தரவு கடிதத்தை உமாசங்கருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் அண்மையில் அனுப்பியிருந்தார். அதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரசங்கம், பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும், கடந்த 16-ந் தேதி நீங்கள் நடத்திய கூட்டம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் தகவல் வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற முறையில் சமுதாயத்துக்குள் வகுப்புவாதம், அமைதி குலையும் சம்பவங்கள் எதிலும் தாங்கள் ஈடுபடக் கூடாது. இதற்கு மாறாகச் செயல்பட்டால் நடத்தை விதியின் அடிப்படையில் தங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தடை நடவடிக்கைக்கு இந்துத்துவா அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆனால் உமாசங்கரோ, தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குத் தடை கோரி நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்.
நான் வழிபாடு நடத்த தேவாலயத்துக்கு செல்வது எப்படி தவறாகும்? தேவாலயத்துக்குள் நான் பிரசங்கம் மேற்கொள்வது எப்படி தவறாகும்? அது என்னுடைய மத ரீதியான உரிமை. அதை அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு. நான் பரப்புரைகளில் ஈடுபடலாம் என்பதை அரசுக்கு எடுத்துச் சொல்வது கடினம். அதனால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்கிறார்.












Click it and Unblock the Notifications