அதிமுகவுக்கு GOOD.. திமுகவுக்கு BAD.. நாதகவுக்கு UGLY.. 2026ல் விஜய் தானா கேம் சேஞ்சர்! பரபர களம்!
சென்னை: கோடைக் காலத்தை விட தமிழக அரசியல் களம் தான் தற்போது சூடாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரம் அடைந்து இருக்கின்றன. அதிமுக திமுக தவிர்த்து அரசியலில் தற்போது பேசும் பொருளாக இருப்பவர் விஜய். 2026 தேர்தலில் விஜயால் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கேள்வி எழும்பினாலும், அவர் கட்சி தரப்பில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக தான் சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஐந்து ஆண்டுகள் நல்லாட்சி தந்தோம், அதனால் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறோம் எனக் கூறி வருகிறார்.
2026 இல் தான் அதற்கு விடை கிடைக்கும். நேர் மாறாக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டு விட்டது, சட்டம் ஒழுங்கு சரியில்லை, 2026 அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

விஜய் அரசியல்
இப்படியாக இருபெரும் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகிறத. மேலும் தொடர் தோல்விகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காக கூட்டணி பேச்சு வார்த்தைகளையும் தீவிரப்படுத்தி வருகிறார். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சில கட்சிகளை அழைத்து வரவும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாமக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
2026 தேர்தல்
திமுக கூட்டணியை பொறுத்தவரை அது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டது தான் என்கிறார்கள். மேலும் சில கட்சிகளும் கூடுதலாக இணையலாம் எனவே கருதப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க விஜயின் நிலைப்பாடுதான் தற்போது அரசியல் களத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சிக்கு தயார் என விஜய் வெளிப்படையாக அறிவித்தாலும் இதுவரை யாரும் அவருடன் கூட்டணி சேரவில்லை.
தமிழக வெற்றி கழகம்
அரசியல் எதிரியான திமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க முடியாது, கொள்கை எதிரியான பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. புதுவரவான விஜயை நம்பி யாரும் கூட்டணிக்கும் வரமாட்டார்கள் என்பதால் 2026 தேர்தலில் விஜயின் நிலைமை பரிதாபகரமாக இருக்கிறது என்கின்றனர். அதே நேரத்தில் 2026 தேர்தல் தான் விஜய் தனது பலத்தை நிரூபிக்க சரியான சமயம் அப்போது பாருங்கள் என கூறுகிறார்கள் தமிழக வெற்றி கழகத்தினர்.
விஜய் கட்சி
அப்படி என்ன இருக்கிறது விஜய் இடம் என கேட்டபோது," விஜயகாந்த் எப்படி ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினாரோ அதேபோல் தான் விஜய்யும் ஏற்படுத்துவார். வருகிற தேர்தலில் நிச்சயம் தனித்துப் போட்டியிட்டாலும் 5 முதல் 10 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றுவது உறுதி. யார் ஜெயிக்கிறார்களோ இல்லையோ விஜய் ஜெயித்து சட்டமன்றத்திற்கு செல்வார். நிச்சயம் 8 முதல் 10 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும். தென் மாவட்டங்களில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
விஜய் வாக்கு சதவிகிதம்
நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தையும் நிச்சயம் விஜய் உடையார். அதே நேரத்தில் இஸ்லாமிய வாக்குகள், இளைஞர் வாக்குகள், முதன்முறை வாக்காளர்களின் வாக்குகள் ஆகியவையும் விஜய்க்கு கிடைக்கும். பாஜகவும் திமுகவும் விஜயை எதிர்த்து பேசி வருகின்றன. ஆனால் அதிமுக இதுவரை விஜயை விமர்சிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் கடைசி கட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு கூட விஜய் செல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய சூழலில் பாஜக வந்திருப்பதால் சிறுபான்மையின வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது.
திமுக அதிமுக
பாமக அதிமுக கூட்டணிக்கு சென்றால், வட மாவட்டங்களில் ஆதிதிராவிடர்கள் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லும். அதே நேரத்தில் நைனார் நாகேந்திரன் வருகை காரணமாக முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் நிச்சயம் அதிமுகவுக்கு செல்லும். கொங்கு மண்டலத்தில் அதிமுக ஏற்கனவே பலம் வாய்ந்தது. தற்போது திமுக கூட்டணி கொங்கு மண்டலத்தை குறிவைத்து செயலாற்றி வருகிறது. அதற்காகத்தான் செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு ஏற்கனவே எஸ்பி வேலுமணி தங்கமணி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் வலுவாக கட்சியை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.
தமிழக தேர்தல்
இப்படியான சூழலில் இரு கூட்டணி வாக்குகளை பிரிப்பது தான் விஜயின் வேலையாக இருக்கும். அது யாரோ ஒருவருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. இது எப்படி எனினும் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திற்கு வர முடியாது. விஜய் கட்சியே நிச்சயம் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் வரும். ஆயிரம் முதல் 5000 ஓட்டு வித்தியாசத்தில் ஒரு கட்சி தொகுதியை விட்டுக் கொடுக்கிறது என்றால், நிச்சயம் அதில் விஜய்யின் பங்கு இருக்கும். தொகுதிக்கு பத்தாயிரம் வாக்குகள் பெற்றால் கூட அது நிச்சயம் ஏற்கனவே இருக்கும் பிரதான கட்சிகளை பாதிக்கும்.
விஜய் கூட்டணி
அதன் மூலம் தமிழக வெற்றி கழகம் எந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் வருகின்ற தேர்தல்களில் நிச்சயம் அந்த கட்சியை கூட்டணிக்கு பிற கட்சித் தலைவர்கள் அழைப்பார்கள். முதல் முறை சந்தித்த தேர்தலில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அதற்கு அடுத்த தேர்தலில் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்று பவன் கல்யாண் துணை முதலமைச்சர் ஆனார் என்பதையும் பார்க்க வேண்டும். விஜயகாந்த் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.
விஜய் வெற்றி
அந்த வகையில் எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் ஆகிவிட மாட்டோம் என்பது விஜய்க்கு நன்றி தெரிந்திருக்கிறது. தற்போதைக்கு விஜயின் எண்ணம் ஆட்சி அல்ல, வலுவான கட்சியாக, அதற்குப் பிறகு எதிர்க் கட்சியாக, அதற்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இதற்கு சில காலம் பிடிக்கும் என்பதையும் விஜய் உணர்ந்திருக்கிறார். அதே நேரத்தில் வருகின்ற தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மிகப்பெரிய சவாலாக விஜய் இருப்பார் என அடித்துச் சொல்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் எப்படி ஒரு காலத்தில் விஜயகாந்த் கூட்டணிக்காக திமுகவும் அதிமுகவும் காத்திருந்ததோ, அதேபோல விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக்காகவும் காத்திருப்பார்கள் எனவும் உறுதியாக பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications