ரேஷன் + மெட்ரோ + பேருந்து.. இங்கெல்லாம் ரூ. 2000 செல்லுமா? இதுதான் ரொம்ப முக்கியம்.. கவனம்!
சென்னை: தமிழ் நாட்டில் முக்கிய அரசு சேவைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுமா என்ற விவரம் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. வங்கிகளில் 2000 ரூபாய்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது இன்று முதல் தங்கள் சொந்தக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.

2000 ரூபாயை மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்து உள்ளது . ரூ.2000 கரன்சி நோட்டுகள் செப்டம்பர் 30க்குப் பிறகும் சட்டப்பூர்வமான டெண்டராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ளவர்கள் பணத்தை கடைகள் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் முக்கிய அரசு சேவைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுமா என்ற விவரம் வெளியாகி உள்ளது.

டாஸ்மாக் கடைகள்:முன்னதாக டாஸ்மாக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது அறிவிப்பு வெளியிடப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்திகள் உண்மை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே டாஸ்மாக்கில் 2000 ரூபாய் கொடுத்து மது பாட்டில்களை வாங்க முடியும்.
பேருந்துகள்:அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என்று அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் அறிவித்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அதிலும் உண்மை இல்லை.
பேருந்துகளில் 2000 ரூபாயை கொடுத்து தேவையான நேரங்களில் மாற்றிக்கொள்ள முடியும்.

ரேஷன் கடைகள்:இன்னொரு பக்கம் சில ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் வாங்குவது இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக மக்கள் பொருட்கள் வாங்கிய பின் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதை அதிகாரிகள் வாங்குவது இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். ரேஷன் கடைகளில் எப்போதும் போல 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும்.
அதில் மாற்றம் இருக்க கூடாது. செப்டம்பர் 30ம் தேதி வரை இதற்காக காலம் இருக்கிறது. அதுவரை இந்த ரூபாய் செல்லும் என்பதால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மெட்ரோ மற்றும் நகை கடைகள்:அதேபோல் மெட்ரோவில் அதிக தொகைக்கு டிக்கெட் எடுத்தால், ரீ சார்ஜ் செய்தால் 2 ஆயிரம் ரூபாயை கொடுக்கலாம். மேலும் நகை கடைகளில் 2000 ரூபாயை கொடுத்தான் மாற்றலாம்.
இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு நகை கடைகள் அதிக அளவில் தங்கங்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும், நகை கடைகளுக்கு நகை விற்பனை செய்யும் டீலர்களிடம் இருந்தும் இவர்கள் நகைகளை வாங்கி உள்ளனர்.
மக்கள் பலர் பயந்து கொண்டு நகைகளை வாங்குவார்கள் என்பதால் ஸ்டாக் வைத்துக்கொள்ள இப்படி இந்திய நகை கடைகள் நகைகளை கூடுதலாக வாங்கி வைத்துள்ளனர். இருப்பினும், 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது காணப்பட்ட சூழ்நிலையைப் போல இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications